சினிமா செய்திகள்

கடைசிநேர நிகழ்வு – மகிழ்ச்சியில் இறைவன் படக்குழு

ஜெயம் ரவி நடிப்பில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் இறைவன்.தனிஒருவன் படத்துக்குப் பிறகு இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக நயன்தாரா நடித்துள்ளார்.

வாமனன்,என்றென்றும் புன்னகை,மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமத் இயக்கியிருக்கும்
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், ஜெயராம்.ஜி இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குநர் அகமத், தன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் வெளியிட்டால்தான் வெகுமக்களிடம் சென்று சேரும்.

அந்தவகையிலும் இந்தப்படத்துக்கு நல்வாய்ப்பு அமைந்துள்ளது.

இப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுகிறது. கடைசி நேரத்தில் இப்படத்தை வெளியிடும் உரிமையை அந்நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.

இப்படம் மட்டுமின்றி செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கும் சந்திரமுகி 2, சித்தா ஆகிய படங்களையும் திரையரங்குகளில் வெளியிடவிருப்பது ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான்.

இதனால் மூன்று படங்களுக்குமே, ஒட்டுமொத்தத் திரைகளில் அவரவர்க்கு உரிய முறையில் திரைகளை ஒதுக்கி, திரையரங்குகளில் இருந்து கூடுதல் விழுக்காட்டில் பங்கு வாங்கித் தரும் வேலையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் செய்துவிடும்.

இறைவன் படத்தைப் பொறுத்தவரை, புதிய கதைக்களம், திறமையான நாயகன், நல்ல இயக்குநர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய வலிமையான கூட்டணியில் உருவாகி பார்த்தோரிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்பதால் திரையரங்குகளிலும் நல்ல வசூலைப் பெறும் என்கிற நம்பிக்கையில் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

Related Posts