சினிமா செய்திகள்

லியோ இசைவெளியீடு இரத்து – காரணம் இவர்தான்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் இடம்பெறும் ‘நான் ரெடி’ என்ற பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டுவிழா அக்டோபர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதற்கு அரங்கம் அமைக்கும் வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.

நேற்றிரவு, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் விழாவுக்கான அனுமதிச்சீட்டு கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும் இரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அடிக்கடி படம்குறித்த தகவல் வெளியிடுவோம்.

பின் குறிப்பு: இசை வெளியீடு நடத்தாதது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல.

இவ்வாறு தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

அரசியல் அழுத்தங்கள் இதற்குக் காரணம் இல்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாலேயே அதுதான் காரணம் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

அது உண்மைதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆம், இந்த இசைவெளியீடு இரத்தானதற்குக் காரணம் விஜய் மக்கள் இயக்கம்தான்.

அண்மைக்காலமாக, தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளை மையப்படுத்தி இரசிகர்களைச் சந்திப்பது மாணவர்களுக்குப் பரிசளிப்பது ஆகிய வேலைகளை விஜய் செய்துவந்தார்.

அந்தக் கட்டமைப்பே இப்போது அவருடைய திரைப்பட விளம்பரத்துக்கு எதிரியாகிவிட்டது.

லியோ இசைவெளீயீட்டுவிழாவில் கலந்து கொள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது நூறு அனுமதிச்சீட்டுகள் வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கேட்டிருக்கிறார். அப்படியானால் அவர்களுக்கே 23400 அனுமதிச்சீட்டுகள் வேண்டும்.

அரங்கின் மொத்த இருக்கைகளே ஆறாயிரம்தான். அப்படி இருக்கும்போது தொகுதிக்கு நூறு தரமுடியாது. தொகுதிக்கு பத்து எனப் படக்குழு சொல்லியுள்ளது.

அப்படியானால் பெரும் குழப்பம் ஏற்படும். அது அடுத்தடுத்த நிகழ்வுகள் நடத்தும்போது மோசமாக எதிரொலிக்கும் என்று சொன்ன புஸ்ஸி ஆனந்த், விழாவை மொத்தமாக இரத்து செய்துவிடுங்கள் அது நமக்குப் பல வகைகளில் நன்மையாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதை அறிந்த விஜய், புஸ்ஸி ஆனந்த் சொன்னபடி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். இதனாலேயே விழாவை இரத்து செய்துவிட்டார்கள்.

Related Posts