சினிமா செய்திகள்

திட்டமிட்டபடி அயலான் வெளியாகுமா? – என்ன நடக்கிறது?

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.அந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

அந்தப்படத்துக்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் வெளீயாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் இன்றுநேற்றுநாளை புகழ் ரவிக்குமார் இயக்குகிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஏ.ஆர்.ரகுமான்.

கொரோனா உட்பட பல சிக்கல்களால் தாமதமான இந்தப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக கணினி வரைகலைக்காட்சிகள் தொடர்பான வேலைகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

இப்போது, கணினி வரைகலைக் காட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் பேந்தம் நிறுவனம்,படத்தில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன.எங்கள் நிறுவனத்தைத் தாண்டி வெளியில் வேலை கொடுத்து வாங்கினால் கூட தீபாவளிக்குள் அயலான் பட வேலைகளை முடிக்கவியலாது என்று சொல்லிவிட்டார்களாம்.

இதனால் இப்படம் தீபாவளிக்கு வராது என்றே சொல்கிறார்கள்.

அப்படியானால் அடுத்து எப்போது? என்கிற கேள்வி இருக்கிறது.

நவம்பரில் தீபாவளி என்பதால் டிசம்பருக்குள் படத்தை முடிக்கவியலாது. எனவே 2024 பொங்கலுக்கு படத்தை வெளியிடுவார்கள் என்பது கணக்கு.

அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

இந்தமாதம் வரவேண்டிய, பிரபாஸ் பிரசாந்த்நீல் கூட்டணியில் உருவாகியுள்ள சலார் படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. அந்தப்படமும் 2024 பொங்கலின் போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப்படம் வந்தால் தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் அயலானுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை சலார் முன்பாகவே வெளியாகிவிட்டால் பொங்கலுக்கு அயலான் வரும் அல்லது மேலும் தள்ளிப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

இவை எல்லாமே அனுமானங்கள், அதிகாரப்பூர்வமானவையன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts