இயக்குநர் இமயம் மறைந்தார் – சோகத்தில் திரையுலகம்
இயக்குநர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 84.
பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம்.அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள்.1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர்.சகோதரர்கள் மூவர்.பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.
1977 ஆம் ஆண்டு வெளியான’16 வயதினிலே’திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. தமிழ்த் திரையுலகுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதியவர் என்கிற பெருமை அவருக்கு உண்டு.அதுவரை பெரும்பாலும் அரங்குகளுக்கு உள்ளேயே இருந்த திரைப்படங்களை,கிராமத்து வயல்வெளிகளுக்கும்,மண்வாசனைக்கும் கொண்டு சேர்த்தவர்.
கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள்,அலைகள் ஓய்வதில்லை,முதல் மரியாதை,கருத்தம்மா உள்ளிட்டு இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ்த் திரையுலகின் மைல்கற்களாக அமைந்தன.கல்லுக்குள் ஈரம் படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார் பாரதிராஜா.
‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது அன்பழைப்பு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி ஒன்றிய அரசு அவரை கவுரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.
பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே.2004 இல் பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது ஒன்றிய அரசு.ராதா,ராதிகா,ரேவதி,கார்த்திக் உள்ளிட்ட நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். மொத்தம் 44 படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார்.
அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார்.
அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், இரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.











