மீண்டும் தள்ளிப்போகிறது தங்கலான்?
விக்ரம் நடித்திருக்கும் படம் தங்கலான்.இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தங்கம் வெட்டி எடுக்கும் கோலார்தங்கவலை மையமாகக் கொண்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல், ம்துரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.
படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படம் 2024 பொங்கல் நாளிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் தயாராகவில்லை என்பதால் சனவரி 26 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
அந்தத் தேதிக்குள்ளும் தயாராகவில்லை என்பதால் வெளியீட்டை ஏப்ரல் மாதத்துக்குத் தள்ளிப்போட்டார்கள்.
ஏப்ரல் மாதம் என்று சொன்னார்களே தவிர தேதி எதுவும் சொல்லவில்லை.அவர்கள் சொல்லாவிட்டாலும் ஏப்ரல் 11 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் நடந்துவருவதாக வியாபார வட்டத்தினர் சொல்கிறார்கள்.
இந்நிலையில், அந்தத் தேதியிலும் படம் வெளியாகாது.படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏன்?
ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும்,மே முதல்வாரத்துக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய அரசு அமைக்கப்படவேண்டும். எனவே,நிச்சயம் ஏப்ரலில் தேர்தல் இருக்கும் என்கிறார்கள்.
தேர்தல் நடக்கிறது என்றால், பரப்புரை,அனல் பறக்கும் விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள் என தேர்தல்களம் மிகவும் சூடாக இருக்கும்.
அந்த நேரத்தில் படம் வெளியானால் அதைப்பற்றிய கவனம் அதிகம் இல்லாமல் போய்விடும், எனவே தேர்தல்சூடு முடிவுக்கு வந்ததும் படத்தை வெளியிடலாம்.இந்தப்படத்துக்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளோம், அவை எல்லாம் வெகுமக்கள் கவனத்துக்கு வராமல் போய்விடும் என்கிற கருத்து சொல்லப்படுகிறதாம்.
இந்தத் தேதியிலும் தள்ளிவைத்தால் சரியாக இருக்காது என்று ஒருதரப்பும், தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்த பின்பு வெளியிட்டால் படத்துக்கு நல்ல கவனம் கிடைக்கும் என்று இன்னொரு தரப்பும் சொல்லிக் கொண்டிருக்கிறதாம்.
இந்த விவாதத்தின் முடிவு என்னவாகும்? என்பதைப் பொறுத்தே இப்படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகும் என்றும் அப்படி முடிவானபின்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.