ரஜினிகாந்த்தின் வேட்டையன் வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப் பயிற்சி அன்பறிவ்,ஒப்பனை பானு மற்றும் பட்டினம் ரஷீத்,உடை வடிவமைப்பு அனு வர்தன்.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
2.0,தர்பார்,லால் சலாம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த்தை வைத்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.
அதே போல, ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும், பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு நான்காவது முறையாக இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக திரையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க் குமரனின் நிர்வாகத்தின் கீழ் படப்பிடிப்பிற்குப் பிந்தைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று காலை பத்து மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி, இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.