விமர்சனம்

வெள்ளைப் பூக்கள் – திரைப்பட விமர்சனம்

சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார்.

ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.

திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை எடுக்கிறார். அவரை அப்படிப் பார்க்க மனம் மறுக்கிறது.

அமெரிக்காவின் சியாட்டிலில் நடக்கும் கடத்தல் நிகழ்வுகளில் விவேக் துப்பறியும் உத்திகளில் புத்திசாலித்தனம் இருக்கிறது.

விவேக்குக்குத் தகுந்த துணையாக சார்லி அமைந்திருக்கிறார். படம் நெடுக இருவரும் காதலன் காதலி போல் சுற்றிவருகிறார்கள்.

விவேக்கின் மகனாக நடித்திருக்கும் தேவ், மருமகளாக நடித்திருக்கும் வெள்ளைக்கார அழகி பெய்ஜ்ஹெண்டர்சன், பூஜா தேவரியா உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அழகைக் கண்கள் நிறையக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர்

இராம்கோபால்கிருஷ்ணராஜு இசையில் மதன்கார்க்கியின் பாடல்வரிகள் கதைக்குப் பலம் சேர்க்கின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் விவேக் இளங்கோவன், துப்பறியும் கதைகளுக்கான எல்லா அம்சங்களும் நிறைந்துள்ள திரைக்கதை.

அதில் இறந்தகாலம் என்பதை அறியாவண்ணம் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில் புத்திசாலித்தனம் காட்டியிருக்கிறார். சமுதாயத்தில் நடக்கும் பெரிய கொடுமையைக் கதையில் வைத்திருப்பது நல்ல விசயம்.

விவேக் எல்லாவற்றையும் விளக்கிப் பேசிக்கொண்டே இருப்பது படத்தின் பலவீனம்.

நகைச்சுவைக்கு மட்டுமின்றி அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய எல்லாவிதமான வேடங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் விவேக்.
.

Related Posts