மெஹந்தி சர்க்கஸ் – திரைப்பட விமர்சனம்
எல்லாப்படங்களிலும் காதல் இருக்கிறது. அவையெல்லாம், காதல் போயின் சாதலா? இன்னொரு காதல் இல்லையா? என்று கடந்து போய்க்கொண்டே இருக்கின்ற காதலாக இருக்கும்.
இந்தப்படம், காதலில் தொடங்கி காதலில் வாழ்ந்து காதலில் உறைந்த ஓர் காதலனின் கதை.
வடநாட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தி சர்க்கஸ் குழு. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இளம்பெண்ணைப் பார்த்ததும் கொடைக்கானலில் இசைத்தட்டு கடை வைத்திருக்கும் இளைஞன் காதல் கொள்கிறான்.
எண்பதுகளில் நடக்கும் கதை என்பதால் அக்காலகட்டத்தில் காதலுக்கு வருகிற சிக்கல்கள் எல்லாம் அந்தக்காதலுக்கு வருகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.
நாயகன் ரங்கராஜுக்கு இது முதல்படம். நடனம் சண்டைப்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு நான்கு பாடல்களில் நடனமாடிவிட்டு இரண்டு சண்டைக்காட்சிகளில் நடித்துவிட்டுப் போகிற வழக்கமான நாயகனாக இல்லாமல், ஒவ்வொரு கணமும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான ஆழமான வேடம்.
துணிச்சலாக அந்த வேடத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு நியாயம் செய்திருக்கிறார் ரங்கராஜ்.கடைசியில் கண்களைக் கட்டிக் கொண்டு கத்தி வீசும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
படத்தின் நாயகி, வடமாநில வெள்ளைத் தோலழகியாக ஸ்வேதா திரிபாதி நடித்திருக்கிறார். கொடைக்கானல் மலையழகா? இந்தப்பெண்ணழகா? என்று கேட்குமளவுக்கு நாயகியைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.
விலங்குகள் இன்றி மனிதர்களை வைத்தே திறன் காட்டும் அந்த சர்க்கஸில், உயிரைப் பணயம் வைத்து நிற்கிற வேடம் அவருக்கு. கண்களிலும் உடலிலும் எந்தச் சலனமுமின்றி அவர் நிற்கும்போது நமக்கு நடுங்குகிறது.
ஃபாதராக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி சிறப்பு. ஃபாதர் என்பவர் எல்லாம் துறந்தவராக இருக்கவேண்டுமென்பதில்லை என்கிற உண்மையை அவரை வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்துவுக்கு வழக்கமான தமிழ்ப்பட வில்லன் வேடம்.
நாயகனின் நண்பராக வரும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
சர்க்கஸில் கத்தி வீசும் விகாஷ், சர்க்கஸ் முதலாளி சன்னி சார்லஸ் ஆகியோர் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். சர்க்கஸில் மட்டும் கத்தி வீசுகிற ஆள் இல்லை என்பதைத் தன் நடிப்பால் வெளிப்படுத்துகிறார் விகாஷ்.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கும்.யுகபாரதியின் வரிகளில் வெள்ளாட்டுக் கண்ணழகி, கோடி அருவி பாடல்கள் சுகமோ சுகம்.
காதலும் காதல் நிமித்தமுமான அழகான தெளிந்த நீரோடையாய் ஓடும் கதை வசனத்தை ராஜுமுருகன் எழுதியுள்ளார். மனசுல இருக்கிறவந்தான் புருஷன் என்கிற வசனம் கல்வெட்டு.
செல்வகுமாரின் ஒளிப்பதிவு நன்று. கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி எல்லாக்காட்சிகளையும் சிறப்பாக்கியிருக்கிறார்.
பரபரப்பான திரைக்கதையோட்டமே வெற்றி பெறும் என்கிற கருத்தைப் பொய்யாக்கி அழகான காதல்,இளையராஜா பாடல்கள் சண்டைக் காட்சிகளே இல்லாத கதையைத் தேர்ந்த்டுததற்கே இயக்குநர் சரவண ராஜேந்திரனைப் பாராட்டலாம்.
வேலராமமூர்த்தியின் வேடம், காதலர்களுக்கு அடைக்கலம் தருகிற பெண் வீட்டில் பெரியார் அம்பேத்கர் படங்கள், அவசரத் தொலைபேசியைப் பேசக்கூட வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று பிடிவாதம் காட்டும் மாரிமுத்துவை சம்பந்தப்பட்டவரே வீட்டுக்குள் நுழைந்து காப்பாற்றுகிற காட்சி ஆகியன உட்பட பல இடங்களில் தான் யார்? என்பதைச் சொல்லுகிறார் இயக்குநர்.
எண்பதுகளில் கதையை நடக்க வைத்து எந்நாளும் பேசப்படுகிற காதலைக் கொடுத்திருக்கிறார் சரவண ராஜேந்திரன்.











