விமர்சனம்

மகா சேனா – திரைப்பட விமர்சனம்

இயற்கையைச் சிதைக்கும் மனிதப் பேராசையை விமர்சித்து வெளிப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அவற்றின் வரிசையில் இணைகிற படம் மகாசேனா.

பழங்குடியினத்தைச் சேர்ந்த நாயகன் விமல், சேனா என்ற யானையை வளர்க்கிறார்.அந்த யானை அவருடைய மகளையே தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்றுவிடுகிறது.அந்த யானையைத் தேடிச் செல்கிறார் விமல்.அதேநேரம், மலைகிராமக் கோயிலில் இருக்கும் மதிப்புமிக்க சிலையைத் திருடும் முயற்சி நடக்கிறது.இதிலும் நாயகன் சம்பந்தப்படுகிறார்.இவற்றின் முடிவுகள் என்னென்ன? என்பதைச் சொல்கிறது படம்.

நாயகன் விமல்,அவருடைய இயல்பான அலட்சிய உடல்மொழியைத் தாண்டி திடமான பழங்குடி இளைஞராக நடிக்க முயன்றிருக்கிறார்.சில காட்சிகளில் வியக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கேவுக்கு பாடலுக்கு வந்துபோகிற கதாநாயகி வேடமில்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடம்.அதற்குத் தக்க நடித்திருக்கிறார்.

நகைச்சுவைக்காக யோகிபாபு சிரிக்கவைப்பார் என்று நினைத்திருக்கிறார்கள்.வனத்துறை அதிகாரியாக வரும் ஜான் விஜய்,வழக்கம்போல் மிகை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எதிர்மறை நாயகனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன்,பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா உள்ளிட்டோர் அந்தந்த வேடத்தின் தன்மைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் கதைக்களம்.மலை,மலையடிவாரம்,காடு ஆகிய இயற்கைச் சூழலை அள்ளிக் கொடுத்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர்.

ஏ.பிரவீன் குமாரின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் கேட்கும் இரகம். உதய் பிரகாஷ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.திரைக்கதையுடன் இணைந்து இசைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன்,உயரிய சிந்தனையைக் கொண்டிருக்கிறார்,அதைச் செயலாக்குவதில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். காட்டை பின்னணியாகக் கொள்ளாமல் ஒரு கதாபாத்திரம் போல் உணர வைத்திருப்பது நன்று.

– இளையவன்

Related Posts