September 15, 2026
விமர்சனம்

காஞ்சனா 3 – திரைப்பட விமர்சனம்

பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார்.

பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும்.

லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே இப்படக்கதையிலும்,ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஆதரித்து பாதுகாக்கிறார். அப்போது ஓர் அமைச்சரால் அவருக்குத் தொல்லை. அதனால் அவர் காதலியுடன் கொலை செய்யப்படுகிறார். அதன்பின் ஏற்படும் விளைவுகள்தாம் படம்.

பயப்படுபவராக மட்டுமின்றி பிளாஷ்பேக்கில் வரும் வீரராகவும் லாரன்ஸே நடித்திருக்கிறார். இரு மாறுபட்ட வேடங்களிலும் கூடுதல் உழைப்பைச் செலுத்தி நடித்திருக்கிறார். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இம்முறை சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவற்றிற்கும் நல்ல வரவேற்பு.

காஞ்சனாவில் லட்சுமிராய் காஞ்சனா 2 இல் டாப்ஸி இந்தப்படத்தில் அவ்விடத்தை நிரப்ப ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி ஆகிய மூன்று நாயகிகள்.

மூவரும் போட்டி போட்டுக் கவர்ச்சி காட்டுகிறார்கள். நடித்திருக்கிறார்கள்.நிகழ்காலத்தில் இவர்கள் வந்துவிட்டால் பிளாஷ்பேக்குக்கு ஒரு நாயகி வேண்டுமே? அதனால், லோனா சிமோன் என்கிற வெள்ளைக்கார நடிகை ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார்.துளி கவர்ச்சி இல்லாமல் குடும்பப் பெண்ணாக அவர் வருகிறார்.

காஞ்சனாவில் நகைச்சுவையில் கலக்கிய கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் கூட்டணி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது. அது நகைச்சுவை ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

வில்லன்களாக தருண் அரோரா, கபீர் சிங் ஆகியோர் கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தில் சூரியும் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்குத்தான் அவர் இருக்கிறார்.

பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் தமன் கூடுதல் வேலை பார்த்திருக்கிறார்.

வெற்றி பழனிசாமி, சர்வேஷ் முராரி ஆகியோரின் ஒளிப்பதிவு தேவைக்கேற்ப அமைந்திருக்கிறது.

குடும்பத்தோடு இருக்கும்போது செய்யும் காதல் சேட்டைகள், சிறுநீர் கழிக்கும் காட்சி போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். அதே போல படம் முழுக்க ஒலிமாசு. அதை அவர் அறவே கைவிட்டால் நல்லது.

முந்தைய படங்களோடு ஒப்பிடாமல் போய்ப் பார்த்தால் ரசித்துவிட்டு வரலாம்.

Related Posts