ஃபாரின் சரக்கு – திரைப்பட விமர்சனம்
ஃபாரின்சரக்கு என்றால் வெளிநாட்டு மதுவகை என்பதுதான் நேரடி மொழிபெயர்ப்பு. ஆனால் இந்தப்படத்தில் அதற்குப் புதுஅர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.
குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் இரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரைப் பத்து நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு ஒரு ரவுடிக்கூட்டத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனைக் கண்டுபிடிக்க வேறுசிலரும் புறப்படுகிறார்கள்.அவர்கள் அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காகத் தமிழகத்தில் இரகசியமாகத் தங்க வைக்கப்படுகிறார்? ஆகிய கேள்விகளுக்கான விடைதான் படம்.
நாயகர்களாக நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.படம் முழுக்க விறைப்பாகவே இருக்கிறார்கள். அதற்கான காரணம் தெரியும்போது பொருத்தமாக இருக்கிறது.
மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் உசேன், கவனிக்க வைக்கிறார்.அமைச்சர் மகனாக வரும் சுரேந்தர் சுந்தரபாண்டியனும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
அஃப்ரினா, ஹரிணி, இலக்கியா ஆகிய மூன்று கதாநாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். வழக்கமான கதாநாயகிகளாக அல்லாமல் கதைக்கான நாயகிகளாக இருக்கிறார்கள்.
பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கின்றன. பின்னணி இசை சில காட்சிகளில் சரியாகவும் பல காட்சிகளில் அளவுக்கு அதிகமாகவும் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் ஒளிப்பதிவு பலம். ஒரு பெரிய சண்டைக்காட்சி ஒளிப்பதிவால் கூடுதல் கவனம் பெறுகிறது.
படத்தொகுப்பாளர் பிரகாஷ்ராஜ் பணியிலும் தாழ்வில்லை.
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை நினைவுபடுத்தும் கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர் அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை பலவித திருப்பங்களோடு சொல்லியிருக்கிறார்.நான் வாழ்கிற வாழ்க்கை ஒன்று நான் பார்க்கிற வாழ்க்கை வேறொன்றாக இருக்கிறது என்று வருத்தப்படுவர்களுக்கான பிரதிநிதியாக இயக்குநர் இருக்கிறார்.
’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் ஒரு இடத்தில் கூட மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைக்காததற்காகவும் குஜராத் மாநிலம் குற்றவாளிகளின் கூடாரமாக இருப்பதுபோல் காட்டியிருப்பதற்காகவும் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமியைப் பாராட்டலாம்.











