விமர்சனம்

லீடர் – திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடி துறைமுகம் அருகே வாகனங்கள் பழுதுநீக்குநராக நாயகன் லெஜண்ட் சரவணன் பணிபுரிகிறார்.துறைமுகத்துக்குள் சட்டவிரோதமாக நடக்கும் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்க காவல்துறை நாயகனின் உதவியைக் கேட்கிறது.அவர் மறுக்கிறார்.அதனால் அவருடைய பாசமகளைக் கடத்தி வைத்துக் கொண்டு துறைமுகத்தில் சட்டவிரோதச் செயல்கள் செய்யும் வில்லன் கடத்திவிட்டார் என்று சொல்கிறார்கள்.அதனால் வெகுண்டெழும் நாயகன் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதே ஒரு கதைதான் என்றாலும் அதற்குள் சில திடுக்கிடும் திருப்பங்களை வைத்திருக்கும் படம் லீடர்.

நாயகன் லெஜண்ட் சரவணனுக்கு இது இரண்டாவது படம்.முதல்படத்தில் அவரை அவராகவே பார்த்தவர்கள் இப்படத்தில் கதாபாத்திரமாகவே பார்க்கிறார்கள் என்பது நல்ல முன்னேற்றம்.அவரும் சண்டைக்காட்சிகள் மட்டுமின்றி பாசக் காட்சிகளிலும் நடிப்பில் பன்மடங்கு முன்னேறியிருக்கிறார்.மகள் மீதான பாசமே படத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத்துக்கு, மகளைப் பெற்றெடுத்துவிட்டு மறைந்துவிடுகிற சிறிய வேடம் என்றாலும் அதிலும் தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்.மகளாக நடித்திருக்கும் சிறுமி இயல் பொருத்தம்.

காவல்துறை அதிகாரிகளாக ஷாம் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்கள் வரும் காட்சிகளும் அவர்களுடைய அனுபவ நடிப்பும் படத்தை சுவாரசியமாக்குகிறது.

வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் மிரட்டியிருக்கிறார்.

நகைச்சுவைக்காக விடிவி.கணேஷ்,அறந்தாங்கி நிஷா ஆகியோர் இருக்கிறார்கள்.அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

லால்,பிரபாகர்,அம்ரிதா ஐயர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தேவையான அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ்,பாசக்காட்சிகளைப் பனிமழை போலும் சண்டைக்காட்சிகளை எரிமலை போலும் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.

ஜிப்ரானின் இசையில் திருப்புகழ் பாடலான முத்தைத்திரு பத்தித் திருநகை கேட்கும்போதே சிலிர்க்க வைக்கிறது.பின்னணி இசை படத்தை முன்னணிக்குக் கொண்டுவர உதவியிருக்கிறது.

இந்தப்படத்தில் சண்டைகள் மிகச்சிறப்பு என்று எல்லோரும் சொல்லியாகவேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார் சண்டைப்பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ.அவருக்கு மிக வசதியாக வெளிமாநிலம், வெளிநாடு என படப்பிடிப்பு இடங்கள் அமைந்திருக்கின்றன.

பிரதீப்.இ.ராகவ்வின் படத்தொகுப்பு படத்தை வேகமாக்க முயன்றிருக்கிறது.

அப்பாவியான அப்பாவும் மகளும்,மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் நுழைந்தால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கான விடையாக திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் துரை.செந்தில்குமார்.

மையக்கதை பழசு என்றாலும் புதிய கிளைக்கதைகள் பல எதிர்பாரா திருப்பங்கள் ஆகியனவற்றைக் கலந்து ஒரு பரபரப்பான படமாக்கியிருக்கிறார்.

– கதிரோன்

Related Posts