நம்ம வீட்டுப் பிள்ளை – திரைப்பட விமர்சனம்
பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன்.
தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார்.
அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு.
இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பதுதான் படம்நிறைய நடிகர்கள் படத்தில் இருந்தாலும் தன்னுடைய நடிப்பு மற்றும் ஈர்ப்பினால் தனித்துத் தெரிகிறார் சிவகார்த்திகேயன். எல்லாக் காட்சிகளையும் எளிதாகக் கடந்து செல்கிறார்.
பாரதிராஜா, அர்ச்சனா, வேலராமமூர்த்தி, பஞ்சுசுப்பு, நட்டி, சமுத்திரக்கனி,ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் அவரவர்க்குக் கொடுத்த வேலைகளை அளவாகச் செய்திருக்கிறார்கள்.
நாயகி அனு இம்மானுவேலுக்கு சிவகார்த்திகேயனோடு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே.
நகைச்சுவைக்கு சூரி யோகிபாபு ஆகியோர் இருக்கிறார்கள். அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.சூரியின் மகனாக நடித்ஹ்டிருக்கும் இயக்குநர் பாண்டிராஜின் மகன் கவனிக்க வைக்கிறார்.
சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முக்கியமான வேடம். அவரும் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். அதனால் வரவேற்புப் பெறுகிறார்.
இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியிலும் குறை வைக்கவில்லை.
ஒளிப்பதிவு நீரவ்ஷா. அவருடைய அடையாளம் எதுவும் தெரியவில்லை.
குடும்பக்கதை என்றால் என்னென்ன விசயங்களை எதிர்பார்க்கலாமோ அத்தனையும் அட்சரம் பிசகாமல் இருப்பது படத்தின் பலவீனம்.
அண்ணன் தங்கை குறித்த திருப்பமும் பெரிதாக ஈர்க்கவில்லை. அதைவிட அது கதைக்குப் பின்னடைவுதான்.
சிவகார்த்திகேயன் பாரதிராஜா சூரி ஐஸ்வர்யா உள்ளிட்ட எல்லோரும் நன்றாக நடித்தாலும் திரைக்கதையோட்டம் வேகமாக இல்லை என்பது பெரும்குறை.
ஒரு எல்லை வகுத்துக் கொண்டு அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
சிவகார்த்திகேயனின் நாயக பலம் படத்தைப் பாதுகாக்கிறது.











