டேனி – திரைப்பட விமர்சனம்
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அப்பெண்ணின் குடிகாரக் கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளர் துரை.சுதாகர்.
அந்தக் காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் பொறுப்பேற்கும் வரலட்சுமி, மீண்டும் அந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதில் திடுக்கிடும் உண்மை வெளியாகிறது. அதன் காரணமாக வரலட்சுமியின் சொந்த வாழ்விலும் பெரும் சிக்கல்.
அப்படி என்ன நடக்கிறது? அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்கிற படம்தான் டேனி.
வரலட்சுமி சரத்குமாருக்குக் காவல்துறை ஆய்வாளர் வேடம் அளவெடுத்துத் தைத்த சட்டை மாதிரி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. மிடுக்குக்கும் குறைவில்லை.தங்கை நிலை கண்டு துடீக்கும்போது கலங்க வைக்கிறார்.
உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் துரை.சுதாகர் காவல்துறையின் பலவீனமான பக்கத்தின் பிரதிநிதியாகியிருக்கிறார். அசட்டுச் சிரிப்பு அட்டகாசச் சிரிப்பு அதிகாரச் சிரிப்பு ஆகியன அவருடைய நடிப்புத் திறமைக்குச் சான்றாக இருக்கிறது.
அனிதாவின் வேடம் கவனிக்கத்தக்கது. அதற்கு ஏற்றார்போல் நடித்து யார் இவர்? எனக் கேட்க வைத்திருக்கிறார்.
வினொத் கிஷன் வேடத்தின் மூலம் சமுதாயத்துக்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.
டேனி வருகிற இடங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இன்னும் அதிகமாக அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவும், சாய் பாஸ்கரின் பின்னனி இசையும் படத்தின் கதைக்கருவுக்கு நியாயம் செய்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் சந்தான மூர்த்தி,. திரைக்கதையில் இருக்கும் தொய்வுகளைத் தவிர்த்திருக்கலாம். மேலும் சில குறைகள் இருப்பினும்,நடிகர்களிடம் வேலை வாங்கியதிலும், பணக்காரர்கள் தங்கள் பையன்களுக்கு அளவுக்கு மிஞ்சி செல்லம் கொடுத்து வளர்ப்பதால் சமுதாயத்தில் எந்த மாதிர்யான விளைவுகள் ஏற்படுகின்றன என்கிற நல்ல கருத்தைச் சொல்லியிருப்பதிலும் வரவேற்புப் பெறுகிறார்.











