சினிமா செய்திகள்

சமந்தா இப்படி நடிக்கலாமா? – தி ஃபேமிலிமேன் 2 சர்ச்சை

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி தி ஃபேமிலிமேன் 2 இணையத் தொடர் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் மனோஜ்பாஜ்பாய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் தொடரை ராஜ் டீகே ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இதில், விடுதலைப்புலிகள் அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் இணைந்து இந்திய ஒன்றியத்தின் பிரதமரைக் கொலை செய்ய முயல்வதும் அதை காவல்அதிகாரி மனோஜ்பாய தலைமையிலான குழு முறியடிப்பதுதான் கதை.

இந்தக்கதையை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

திட்டமிட்டு அந்த அமைப்பின் அவதூறு செய்ததோடு தலைவரையும் போராளிகளையும் கேரக்டர் அசாசினேசன் செய்திருக்கிறார்கள்.

பிரபாகரன் கெட்ட வார்த்தைகள் பேசுவது போலவும் காட்சிகள் வைத்திருக்கின்றனர்.

இதற்கு, தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு தொடரை உடனே தடை செய்யவேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் இந்தத் தொடரில் நடித்த தமிழ் நடிகர்கள் மீதும் தமிழ் மக்களின் கோபப்பார்வை திரும்பியுள்ளது.

இந்தி இயக்குநர்கள் அழைத்தார்கள் என்பதற்காகவும் இந்தித் தொடரில் நடிக்கிறேன் என்கிற பெருமைக்காகவும் சொந்த இனத்துக்கே துரோகம் செய்கிற வேலையை தமிழ் நடிகர்கள் செய்யலாமா? என்கிற கேள்விகள் வருகின்றன.

போராளியாக நடித்திருக்கும் சமந்தா, பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கும் மைம்கோபி, கேபி வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், ராஜபக்சே போல் நடித்திருக்கும் அபிஷேக் ஆகியோருக்கு, இது தமிழ் இனத்தைத் திட்டமிட்டுக் கொச்சைப்படுத்துகிற படம் என்பது தெரியாமல் நடித்தார்களா? அல்லது பணம், புகழுக்காக எதையும் செய்யும் இழிநிலைக்கு ஆளாகிவிட்டார்களா? என்று கோபமாகக் கேட்கிறார்கள்.

பொதுவாக நடிகர்களுக்குச் சமுதாயப் பொறுப்பு இருக்கவேண்டும், அது கொஞ்சம்கூட இல்லாமல், இது என் தொழில் அதனால் செய்கிறேன் என்று பேசினால் மக்களால் புறக்கணிக்கப்பட்டு நிர்கதியாவார்கள் எனபதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இந்தத் தொடரின் அரசியல் குறித்துத் தெரியாமல் நடித்திருந்தார்கள் என்றாலும் இப்போது வருகிற கருத்துகளை ஆராய்ந்து எதிர்வினை ஆற்றுவது அவர்களுக்கு நல்லது என்கிறார்கள்.

செய்வார்களா?

Related Posts