சிக்கலில் நயன்தாராவின் மூன்று படங்கள் – விவரம்

நயன்தாரா இப்போது தொடங்கப்பட்டிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘எல்.ஐ.கே’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லலித் குமார், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதில் நயன்தாராவும் நடிக்கிறார்.
அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணுஎடவன் ஒரு படத்தை இயக்குகிறார்.அந்தப்படத்தில் கவின் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். இந்தப்படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்துவருகிறார்.
மூன்றாவதாக, அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘ராக்காயி’. இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசைமைக்கிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2024 நவம்பர் மாதத்தில் இப்படம் குறித்த அறிமுகக் காணொலியை வெளியிட்டு அறிவிப்பு செய்தார்கள்.
இம்மூன்று படங்களில் எல் ஐ கே மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் பெரும்பகுதி நிறைவடைந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.
மேற்கொண்டு அப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதில் தடை ஏற்பட்டிருக்கிறது.அதற்குக் காரணம் பணச்சிக்கல் என்கிறார்கள்.
இவ்விரு படங்களிலும் தயாரிப்பிலும் நயன்தாரா சம்பந்தப்பட்டிருப்பதால் அச்சிக்கல் தீராமல் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.
எல் ஐ கே படத்தைப் பொறுத்தவரை இதுவரை சுமார் முப்பது கோடி செலவாகிவிட்டதெனச் சொல்கிறார்கள். மேற்கொண்டு பனிரெண்டு கோடி இருந்தால்தான் படத்தை முடிக்க முடியும் என்று விக்னேஷ்சிவன் கேட்டிருக்கிறார்.அதற்கு தயாரிப்பாளர் லலித்குமார், இனிமேல் இந்தப்படத்துக்கு செலவு செய்ய நான் தயாராக இல்லை,எனவே நான் செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு படத்தை மொத்தமாக நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் எல் ஐ கே நகராமல் இருக்கிறது.அதே தயாரிப்பாளர் என்பதால் விஷ்ணு எடவன் படமும் மாட்டிக் கொண்டுவிட்டது.
இன்னொரு படமான ராக்காயி படத்துக்கு அறிமுகக் காணொலி எடுத்ததோடு சரி.அதன்பின் அந்தப்படம் நகரவில்லை என்கிறார்கள்.ஏனென்று கேட்டால்? அந்தப்படத்துக்கான சம்பளத்தை திடீரென நயன்தாரா அதிகப்படுத்திவிட்டாராம்.அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்துப் படமெடுத்தால் நட்டத்தில்தான் முடியும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் தயங்கிக் கொண்டிருக்கிறது.இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
இப்படி மூன்று படங்கள் தடைபட்டிருந்தால் என்ன? சுந்தர்.சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
அம்மூன்று படங்களின் நிலை என்ன என்பது போகப்போகத் தெரியும்.