சினிமா செய்திகள்

அல்லுஅர்ஜூன் படமும் கைவிட்டுப்போனது – அட்லீக்கு வந்த சோதனை

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜவான்.இந்தி நடிகர் ஷாருக்கான்,விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.

அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்தி நடிகர் சல்மான்கானை வைத்து அடுத்தபடம் இயக்குகிறார் என்று முதலில் சொல்லப்பட்டது.அதன்பின் இப்போது,தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படம் இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை இல்லை.

என்னதான் நடக்கிறது?

சல்மான்கானை வைத்துப் படம் இயக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் ஏற்கெனவே முறிந்து போன அல்லு அர்ஜுனனுடைய கூட்டணியை புதுப்பித்தாராம் அட்லி.

அவருக்கும் அட்லி இயக்கத்தில் நடிக்கச் சம்மதம்.அந்தப்படத்தை யார் தயாரிப்பது? என்கிற சிக்கல் வந்தபோது சன்பிக்சர்ஸ் மற்றும் அல்லுஅர்ஜூனின் நிறுவனம் ஆகியன இணைந்து தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது.

அவற்றில் முற்றாக மாற்றம் நடந்துவிட்டதாம்.

ஏனெனில்? அட்லி கேட்ட சம்பளம் மிக அதிகம் என்பதால் அதற்கு சன் பிக்சர்ஸ் ஒப்புக் கொள்ளவில்லையாம்.அப்படி அவர் கேட்ட சம்பளம் சுமார் ஐம்பத்தைந்து கோடி என்று சொல்லப்படுகிறது.அதோடு படத்தின் இலாபத்தில் பங்கும் கேட்டார் என்று சொல்கிறார்கள்.இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் அல்லுஅர்ஜூன் நிறுவனமே அந்தப்படத்தைத் தயாரிப்பது என்று முடிவாகியிருக்கிறது.அப்போது அட்லியுடன் ஒப்பந்தம் போட முயன்றபோது அந்நிறுவனமும் பெரிய அதிர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்கங்களில் அச்சடிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், ஏராளமான நிபந்தனைகள் இருந்தனவாம்.கதாநாயகன் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்புக்கு வந்தாக வேண்டும் அதில் குறையேற்பட்டால் இன்னின்ன சிக்கல்கள் வரலாம் அவை எதற்கும் நான் பொறுப்பு கிடையாது என்பது உட்பட அதிரத்தக்க பல நிபந்தனைகள் அதில் இருந்தனவாம்.

அதனால் அல்லுஅர்ஜூன் நிறுவனம் படத்தயாரிப்பிலிருந்து பின்வாங்கிவிட்டதாம்.

அதன்பின், தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு,அட்லி சொன்ன நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதோடு அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தாராம்.

ஆனால், இதை அறிந்த தெலுங்குத் திரையுலகினர் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து அட்லிக்கு மட்டுமல்ல எந்த இயக்குநருக்கும் இவ்வளவு சம்பளம் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

கதாநாயகர்களே பெரிய சம்பளம் எனும்போது, வியாபாரத்தில் பங்கு என்பதை ஏற்றுக் கொண்டு நடிக்கிறார்கள்.அப்படி இருக்கும் நம் திரையுலகில் இயக்குநருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் தயாரிப்பாளர் தில்ராஜும் அதே முடிவை எடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது வரை அதிகாரப்பூர்வமாக அட்லிக்குப் படம் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

Related Posts