விமர்சனம்

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் – திரைப்பட விமர்சனம்

அமெரிக்கா என்றால் சுத்தமான நகரங்கள்,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், ஆடம்பரமான மகிழுந்துகள், வசதியான வாழ்க்கை ஆகியனதாம் நினைவுக்கு வரும்.அந்நாட்டின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்.

அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் ஏதிலிகள் கூட்டத்தில் இருக்கும் ஒரு சிறுவன் ஆரி லோபஸ். கால்பந்தாட்டக் கனவோடு அமெரிக்க நகரத்திற்கு வருகிறான்.கனவைத் தேடிப்போன இடத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொத்தடிமையாக்கப்படுகிறான். அவனைப் போல் அந்த இடத்தில் பல சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

அவன் முயற்சி பலித்ததா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கதையின் நாயகன் சிறுவன் ஆரி லோபஸ், வசனங்களே இல்லாமல் கண்கள் மற்றும் உடல்மொழி மூலமாக எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார். அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது அரங்கில் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

அல்ஜென்ரோ சாவேஸின் ஒளிப்பதிவில் இதுவரை நமக்குத் தெரியாத அமெரிக்காவைப் பார்க்க முடிகிறது.கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கேற்ற ஒளியமைப்பு படத்தின் தரத்தை உயர்த்திப்பிடித்திருக்கிறது.

இசையமைத்திருக்கும் லிசாஜெரார்டு திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தை அதிகரிக்கும் வகையில் இசைத்திருக்கிறார்.

மாத்யூ டீசலின் படத்தொகுப்பில் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

மொகித்ராம்சந்தனி இயக்கியிருக்கிறார்.இதுவரை வெளிச்சமாகவே பார்த்த அமெரிக்காவின் இருட்டுப்பக்கங்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார்.அங்கு இலஞ்ச ஊழல்,தொழிலாளர் விரோதப்போக்கு,குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் ஆகிய அனைத்தும் நிறைந்திருக்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டியிருக்கிறார்.

ஆழமான விசயங்களை பொழுதுபோக்கு அம்சங்கள் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார்.பார்த்து இரசிப்பதற்கும் உணர்ந்து சிந்திப்பதற்குமான படம்.

– இளையவன்

Related Posts