விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக  ஆந்திர மாநிலம் எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார்.

ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார்.

பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றுபவர், அவரை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயல்கிறார். இதற்கிடையில் அதே கல்லூரியில் படிக்கும் கௌதம் கார்த்திக்கும் நிஹாரிக்காவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அந்த சமயத்தில் நிஹாரிக்காவை விஜய்சேதுபதி எமசிங்கபுரத்துககு கடத்திச்சென்று விடுகிறார்.

அவரை மீட்க கௌதம் கார்த்திக்கும் அவரின் நண்பன் டேனியலும் எமசிங்கபுரம் செல்கிறார்கள். விஜய்சேதுபதி நிஹாரிக்காவைக் கடத்திச் செல்வதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணம்,கௌதம் கார்த்திக் மீட்கச் செல்லும்போது நடைபெறும்  சம்பவங்கள்தாம் படம்.

மக்களைச் சிரிக்கவைப்பது ஒன்றே அறிமுக இயக்குநர் ஆறுமுககுமாரின் நோக்கம்.

வித்தியாசமான சம்பிரதாயங்கள் கொண்ட  எமசிங்கபுரத்தை அடிப்படையாகக் கொண்டதாலேயே மக்கள் சிரித்துவிடுவார்கள் என்று நம்பியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என இரண்டு கதாநாயகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

சூதுகவ்வும் படம் போலவே திட்டம் போட்டுத் திருடும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. பல கெட்டப்களில் வந்து சோதனை செய்திருக்கிறார். சில இடங்களில் இவர் வசனமே பேசாமல் முக பாவனைகளிலேயே சிரிக்க வைக்கிறார்.

சூழ்நிலை புரியாமல் எதிராகப் பேசும் நண்பனை சரி செய்வது, நிஹாரிக்காவை கண்களாலேயே காதலிப்பது என்று விஜய்சேதுபதியின் வழக்கமான சிறப்புகள் இப்படத்திலும் உண்டு.

கல்லூரியில் காதல் செய்வது, நண்பனுடன் சேர்ந்து கல்லூரி விழாவில் ஆங்கிலப்பாடல் பாடுவது, சிக்கலான நேரத்திலும் அலட்டிக்கொள்ளாமல்  இருப்பது என்று கெளதம் கார்த்திக் அவருடைய வேடத்தை மிகவும் இயல்பாக செய்திருக்கிறார்.

படம் முழுக்கவே கெளதமோடு பயணிக்கும்  டேனியல் ஆனி போப்.  இவர் பேசும் வசனங்கள், உடல்மொழி ஆகியனவற்றிற்கு நல்ல வரவேற்பு.

நாயகியாக வரும் நிஹாரிகா மற்றும் காயத்ரி ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். காயத்ரி கதாபாத்திரமும் அவர் நடிப்பும் சிறப்பு.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை,  ஶ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு ஆகியன பொருத்தம்,

நன்றாக நடிக்கும் விஜய்சேதுபதியும் நன்றாக வளர்ந்து வரும் கவுதம்கார்த்திக்கும் இந்தப்படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்கள் என்பதே படம் முடிந்தவுடன் எழும் கேள்வி.

Related Posts