விமர்சனம்

படைவீரன் சொல்லும் கருத்து சரியா? – படைவீரன் விமர்சனம்

மணிரத்னத்திடம் பணியாற்றிய தனா முதன்முறை எழுதி இயக்கியிருக்கும் படம்,

படமாக்கும் பாணியை மணிரத்னத்திடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதையாக்கத்தில் பாரதிராஜாவைப் பின்பற்றியிருக்கிறார்,

தன் பரிவாரங்களுடன் தேனிப்பக்கம்    படையெடுத்திருக்கும் இயக்குநர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் படமாக்கியிருக்கிறார், அம்மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் சாதிச்சிக்கல்தாம் படம்,

பாடல்கள் பாடி நம்மை மகிழ்வித்த விஜய்ஏசுதாஸ். இப்படத்தின் நாயகன், தேனியைச் சேர்ந்த   இளைஞனாக  மாற மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்,

படத்தின் இன்னொரு நாயகன் போல் இருப்பவர் பாரதிராஜா, முன்னாள் இராணுவ வீரராக நடித்திருக்கும் அவர், தத்ரூபமாக நடித்து கலங்க வைத்திருக்கிறார்,

பாரதிராஜாவுக்குக் கடும் போட்டியாளராக  நடிப்பில் உருவெடுத்திருக்கிறார்  அவருடைய சீடர் கவிதாபாரதி, ஊர்த்தலைவராக நடித்திருக்கும் அவர், உடல்மொழியிலும் பார்வையிலுமே உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்,

நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா, நாயகனின் அக்கா நிஷா, பாரதிராஜாவின் தம்பி மகளாக நடித்திருக்கும் சிந்து ஆகியோர் கொடுத்த பாத்திரத்துக்கு உண்மையாக உழைத்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்,

ராஜவேல்மோகனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மணிரத்னம் படங்களை நினைவுபடுத்துகின்றன,

கார்த்திக்ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணிஇசையும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

படத்தின் முதல்பாதி மொத்தமும் பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது போலவே இருப்பதால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது,

இரண்டாம்பாதியில்தான் மொத்தக்கதையும் இருக்கிறது, படத்தின் இறுதிக்காட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார் இயக்குநர்,

சாதி முக்கியமில்லை மனிதம்தான் முக்கியம் என்கிற கருத்தைச் சொல்லியிருக்கும் இயக்குநர், எரிக்க வேண்டியவை எண்ணங்கள்தாம் மனிதர்களை அல்ல என்பதைப் புரிந்துகொண்டிருந்தால் இன்னும் சிறப்பான படம் கிடைத்திருக்கும்,

Related Posts