விமர்சனம்

ஜெயித்தது விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா? – விசிறி விமர்சனம்

    காதலுக்குப் பல்வேறு வகையான எதிர்ப்புகளைப் பார்த்திருக்கிறாம், காதலர்களுக்குள்ளான போட்டிக்குப் பல்வேறு காரணங்களைப் பார்த்திருக்கிறோம். காதலர்களுக்குள்ளான பிரிவுக்கு விசிறி படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் புதிதாக இருக்கிறது.

    நல்லவேளையாக அதை நியாயப்படுத்தி படத்தை முடிக்காமல், நல்லவிதமாகப் படத்தை முடித்திருப்பதால் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தைப் பாராட்டலாம்.

    தலவெறியன் என்று பெயர் சூட்டிக்கொண்டு அஜீத் ரசிகராக நடித்திருக்கும் நாயகன் ராம்சரவணனுக்கும், தளபதியின் தங்கை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் விஜய் ரசிகையான நாயகி ரெமோனாவுக்கும் காதல்.

    நானும் விஜய் ரசிகர்தான் என்று பொய் சொல்லி ரெமோனாவைக் காதலிக்கிறார் ராம்சரவணன். அதேநேரம், நாயகியின் அண்ணனும் தீவிர விஜய் ரசிகருமான ராஜ்சூர்யாவுடன் முகநூலில் கடும்சண்டையையும் வளர்த்துக்கொள்கிறார். 

    உண்மை தெரியவரும்போது என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.

நாயகர்கள் ராம்சரவணன் ராஜ்சூர்யா ஆகியோரை வைத்துக்கொண்டு இக்கால இளைஞர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

    விஜய் ரசிகருக்கும் அஜித் ரசிகருக்கும் இடையே மோதல் என்றால் இருவரில் ஒருவரை வெற்றி பெற வைக்கமுடியாது. அதேநேரம் இருவரும் சம்பிரதாயமாக ஒருங்கிணைந்தார்கள் என்றும் சொல்லாமல், கதையில் சமுகவலைதளங்களால் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல் ஒன்றைக் காட்டி அதற்கு இரண்டுதரப்பு ரசிகர்களும் இணைந்து தீர்வு காண்பதாகச் சொல்லியிருக்கிறார்.

    நாயகர்கள், நாயகி ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

விஜய் அஜித் ரசிகர்கள் எல்லாம் மகிழ்ச்சியடைகிற வகையில் அவர்களுடைய படக்காட்சிகள் இப்படம் நெடுக அங்கங்கே வந்துகொண்டிருக்கின்றன.

நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் இயக்குநர், திரைக்கதையிலும் பட உருவாக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

திரைப்பட நடிகர்களின் ரசிகர்களைப் பற்றி தவறாகக் கருதிக்கொண்டிருப்போர் இப்படம் பார்த்தால் அவர்களுடைய எண்ணங்கள் மாறுவது உறுதி.

Related Posts