பெட்ரோமாக்ஸ் – திரைப்பட விமர்சனம்
அம்மா அப்பாவின் திடீர் மரணம் காரணமாக அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேற முயல்கிறார் பிரேம்.
அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லி வாங்க மறுக்கிறார்கள்.அதை முறியடிக்க முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டிஎஸ்கே ஆகிய நான்கு பேரை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் பிரேம்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? இந்தக் கதையில் தமன்னா எங்கே வருகிறார்? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
தமன்னா படம் முழுக்க இல்லை,ஆனால் படத்துக்கு ஆதாரமாக இருக்கிறார். அவருக்கு அதிக வேலை இல்லையென்றாலும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.
முனீஸ்காந்த், காளிவெங்கட், சத்யன், டிஎஸ்கே ஆகிய நால்வரும்தான் படத்தின் நாயகர்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடித்து வயிற்றைப் பதம் பார்க்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக டிஎஸ்கே அதகளம் செய்திருக்கிறார். அந்நியன் விக்ரம், சிங்கம் சூர்யா, பாகுபலி காளகண்டேயன் என திரைப்படக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி நித்தியானந்தா போலவும் நடித்து கைதட்டல்களை அள்ளுகிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
மைம்கோபி, கவின் ஜெய் பாபு, ஸ்ரீஜாரவி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
மைனா நந்தினி யோகிபாபு ஜோடி கொஞ்ச நேரம் ரசிக்க வைக்கிறது. மைனா நந்தினிக்கு நல்ல வரவேற்பு.
ஒளிப்பதிவாளர் டேனிரேமண்ட் பேய்ப்படங்களுக்குரிய எல்லா அம்சங்களையும் வைத்திருக்கிறார்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் நன்று.
ரோகின்வெங்கடேசன் இயக்கியிருக்கிறார். தெலுங்குப் படத்தின் மொழிமாற்று என்றாலும் தமிழுக்கேற்ப அவர் செய்திருக்கும் மாற்றங்கள் பலம் சேர்க்கின்றன.
பேய்ப்படங்கள் பயமுறுத்தும் என்பது மாறி சிரிக்க வைக்கும் என்றாகிவிட்டது. இப்படத்தில் பேய்களே மனிதர்களைப் பார்த்து பயப்படுகின்றன என்கிற முன்னேற்றம்.
இரண்டாம் பாதி படத்தைப் பாதுகாக்கிறது.











