ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்
தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா.
தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி தனஞ்செயா,முக்கிய வேடமொன்றில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
நாயகன் சத்யதேவ் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.அங்கு தன் தேவைக்காக 4 இலட்சத்தை மோசடியாக எடுக்கிறார்.அதன் தொடர்ச்சியாக அவர் செய்தது போலவே 5 கோடி பணம் எடுக்கப்பட்டுவிடுகிறது.அதை எடுத்தது யார்? ஏன்? அந்தப் பழியிலிருந்து நாயகன் தப்பினாரா? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
அவசரத்தில் ஒரு தப்பைச் செய்துவிட்டு அதனால் சிக்கித் தவிக்கும் வேடத்தைச் சரியாகச் செய்து தேர்ச்சி பெற்றிருக்கிறார் சத்யதேவ்.
நாயகி பிரியா பவானி சங்கரும் வங்கிப் பணியாளர் வேடமேற்றிருக்கிறார்.கலக்கம் சோகம் மகிழ்ச்சி ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம்.வழக்கம் போல் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
டாலி தனஞ்செயா நல்லவரா? கெட்டவரா? என்று பட்டிமன்றமே நடத்தலாம் என்கிற மாதிரி வேடம்,பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
குறைவான நேரம் திரையில் வந்தாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சத்யராஜ்.அவர் ஏற்றிருக்கும் ஏ டூ ஒய் பாபா என்கிற கதாபாத்திரப் படைப்பும் நன்று.
சுனில்வர்மா, சத்யா அக்காலா ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.ஜெனிபர்,சுரேஷ்மேனன் உள்ளிட்டோர் நடிப்பும் இயல்பு.
ரவிபஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை அளவு.
சத்யா பொன்மர் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒயிலாக அமைந்திருக்கின்றன.கதாபாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒளியமைப்புகள் இருக்கின்றன.
ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியிருக்கிறார். வங்கிகளில் எந்த மாதிரியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன என்பதை இந்தப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.திரைக்கதையும் பலமாக அமைந்திருக்கிறது.இரண்டாம்பாதி வேகம் படத்தைக் காப்பாற்றுகிறது.
– இளையவன்











