விமர்சனம்

கார்பன் – திரைப்பட விமர்சனம்

ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள்  நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன்.

நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. ஜாலியாகப் பேசும் காட்சியிலும் சீரியசாகவே முகத்தை வைத்திருக்கிறார். அப்பாவைப் பற்றி நாயகியிடம் விவரிக்கும் காட்சி உட்பட பல காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

நாயகி ஸ்வப்னாவின் வேடம் நன்று. இந்தப் பூனையும் பால்குடிக்குமா? என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு இந்தப் பூனை மதுவே குடிக்கும் என்பதான காட்சிகள் அவருக்கு. பொருத்தமாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

விதார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, பாசக்கார அப்பாக்களின் அச்சு அசலான பிரதிநிதியாகி நெகிழ வைத்திருக்கிறார்.

தலைமைக்காவலராக நடித்திருக்கும் மூணார் ரமேஷ், இளநீர் வியாபாரியாக வரும் விக்ரம் ஜெகதீஷ்,  காப்பீட்டுத்திட்ட முகவராக வரும் டவுட் செந்தில்,ஏடிஎம் பாதுகாவலராக வரும் மூர்த்தி உள்ளிட்டோரைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்தோடு மிகவும் இயைந்திருக்கிறது.

சாம்.சி.எஸ்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசை சிறப்பு.

படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இரண்டாம்பாதியில் செலுத்திய கவனத்தை முதல்பாதியிலும் செலுத்தியிருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.சீனிவாசன். சிம்புவின் மாநாடு படத்தோடு ஒப்பிட்டுப் பேசக்கூடிய கதைக்களத்தை வைத்துக் கொண்டு நேர்த்தியான படத்தைக் கொடுத்திருக்கிறார். அம்மாவை ஈடுசெய்ய மனைவி வருவார் ஆனால் அப்பாவுக்கு இணையாக வாழ்வில் யாரும் வரமாட்டார்கள் என்பது உட்பட பல நல்ல வசனங்களை எழுதியிருக்கிறார்.

நேர்த்தியான அம்சங்களோடு கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சங்களையும் கலந்திருந்தால் பிரதியின் பலன் பெரிதாக இருந்திருக்கும். 

Related Posts