வி 3 – திரைப்பட விமர்சனம்
ஆடுகளம் நரேன் வீடுவீடாக செய்திதாள்கள் விநியோகிக்கும் பணி செய்துவருகிறார். அவருக்கு பாவனா, எஸ்தர் அனில் ஆகிய இரண்டு மகள்கள். ஒருநாள் மூத்தமகள் பாவனா ஒரு கூட்டத்திடம் சிக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல். இரவு பத்துமணியளவில் நடக்கும் அந்தக் கொடுமைக்கு விடிவதற்குள் நியாயம் கிடைக்கும் என்கிறார் முதலமைச்சர். அதற்கேற்ப அக்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி ஐந்து இளைஞர்களைக் காவல்துறை சுட்டுக்கொல்கிறது.
கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாரிடம் அவர்கள் உடலை ஒப்படைக்க மறுக்கிறது காவல்துறை, அவர்கள் அதற்காகப் போராடுகிறார்கள்.
இந்நிலையில் மனித உரிமை ஆணையம் இவ்வழக்கைக் கையிலெடுக்கிறது. விசாரணை அதிகாரியாக வரலட்சுமி வருகிறார்.
அவருடைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. அவை என்ன? அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் வி3.
ஓர் அதிகாரிக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் வரலட்சுமி.அமைதியாகவே இருந்து அதிரடி காட்டுகிறார். அவருடைய தோற்றமும் நடிப்பும் படத்துக்குப் பலம்.
பாதிக்கப்பட்ட பெண் விந்தியாவாக நடித்திருக்கும் பாவனாவின் நடிப்பு நன்று.அவருடைய பாத்திரப்படைப்பு மனதை உலுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடித்துப் படபடப்பை ஏற்றியிருக்கிறார்.
ஆடுகளம் நரேன், அவருடைய இரண்டாவது மகளாக நடித்திருக்கும் எஸ்தர் அனில், காவல்துறை அதிகாரியாக வரும் பொன்முடி, கொல்லப்பட்ட இளைஞர்கள் குடும்பத்துக்காகப் போராடும் லோகுவாக நடித்திருக்கும் எழுத்தாளர் சந்திரகுமார் ஆகிய அனைவருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
சிவாபிரபுவின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகள் இயல்பாக அமைந்திருக்கின்றன. ஒளியமைப்பில் அவர் செலுத்தியிருக்கும் கவனம் காட்சிகளில் தெரிகிறது.
ஆலன்செபாஸ்டியன் இசையில் பாடல் வரிகள் கதைக்கு வலுச்சேர்க்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை.
நாகூரானின் படத்தொகுப்பில் இன்னும் கவனம் வேண்டும். குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் ஒரு காட்சியில் முதலமைச்சரோடு நிற்கிறார். அதற்கு சற்று முன்பும் பின்னும் ஊரில் இருக்கிறார் என்பது பிழை.
எழுதி இயக்கியிருக்கும் அமுதவாணன் பல அரசியல் கருத்துகளைப் பேசியிருக்கிறார். மாவட்ட ஆட்சியராக இருக்கும் வரலட்சுமி விநாயகர் ஊர்வலம் நடத்துபவர்களால் பாதிப்புக்கு ஆளாவது, தொலைக்காட்சி விவாதத்தில் காவித்துண்டுக்காரர் பேச்சு ஆகியனவற்றில் ஒன்றிய ஆட்சியாளர்களின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துகிறார்.அநியாயமாகக் கொல்லப்படும் இளைஞர்கள் பக்கம் நின்று பேசியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பாவனாவைக் கடைசிக்காட்சியிலும் அந்த அண்ணன்கள் என்று பேசவைத்து சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்குகிறார்.
அவர் சொல்லும் தீர்வுகள் சரியானவையா? என்பது விவாதத்துக்குரியது. அதேசமயம் நோய்நாடி நோய்முதல் நாடி எனும் குறளுக்கேற்ப அவர் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.











