குமார சம்பவம் – திரைப்பட விமர்சனம்
திரைப்படத்துறையில் இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் இருக்கிறார் கதாநாயகன்.அதனால் பல போராட்டங்கள்.அந்தப் போராட்டமெல்லாம் அந்தத் துறைக்குள் என்று நினைத்தால் அதுதான் இல்லை.அவர் வீட்டில் ஒரு மரணம் நடக்கிறது.அது கொலையாக இருக்கலாம் என்கிற ஐயம் காவல்துறைக்கு வருகிறது.காவல்துறையின் பார்வை நாயகன் பக்கமும் திரும்புகிறது.அதிலிருந்து தப்ப நாயகன் எடுக்கும் முயற்சிகள் என்னென்ன? அவர் நினைத்தபடி இயக்குநர் ஆனாரா? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் குமார சம்பவம்.
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர் மூலம் புகழ்பெற்ற குமரன் நாயகனாக நடித்திருக்கிறார்.இயக்குநராக முயன்று கொண்டிருக்கும் காட்சிகள், கொலையை விசாரிக்கும் காட்சிகள், காதல் காட்சிகள், நண்பர்களோடு லூட்டிகள் என எல்லா இடங்களிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணாவுக்கு திரைநேரம் குறைவு.ஆனாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.
படத்தின் தலைப்பில் இடம்பெறும் அளவுக்கு முக்கியமான வேடமேற்றிருக்கும் குமரவேல்,அதற்குத் தக்க நடித்து நற்பெயர் பெறுவதோடு படத்துக்கும் பலம் சேர்க்கிறார்.
நாயகனின் நண்பராக வரும் பாலசரவணன்,மாமாவாக வரும் வினோத் முன்னா, தாத்தாவாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார்,சிபிஐ அதிகாரி வினோத் சாகர், காவல்துறை அதிகாரி சிவா ஆனந்த் ஆகியோரும் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்குத் தக்க நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கிற மாதிரி அமைந்திருக்கின்றன. பின்னணி இசையில் படத்தின் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்களத்தின் தன்மையை கண்களில் கொண்டு சேர்க்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.சாமான்யன் ஒருவன் சந்தர்ப்பம் அமைந்தால் எப்படியெல்லாம் மாறுவான் என்பதை திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவரை வைத்துக் கதை சொல்லியிருக்கிறார்.அதை முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.
சிற்சில குறைகளைத் தாண்டி அவர் முயற்சியில் வெற்றியடைந்திருக்கிறார்.
– வெற்றி











