டிடி ரிட்டர்ன்ஸ் – திரைப்பட விமர்சனம்
ஒரு பேய்பங்களா, இரண்டு மூன்று குழுக்கள்,ஆபத்தான ஒரு விளையாட்டு அதாவது வென்றால் பரிசு தோற்றால் மரணம் என்கிற விளையாட்டு ஆகியனவற்றை வைத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதைதான் டிடி ரிட்டர்ன்ஸ். இதில் கதையை விட நகைச்சுவைதான் அதிகமிருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.
அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது.
புதுச்சேரியிலுள்ள ஒரு தாதா ஃபெப்சிவிஜயனின் பெரும்தொகை கைமாறி கைமாறி சந்தானத்திடம் வருகிறது. அது ஒரு பேய்பங்களாவுக்குள் மறைத்துவைக்கப்படுகிறது.அங்கு, தோற்றால் மரணம் என்கிற ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறார்கள். அதுவும் பேய்களோடு. அதில் வென்றார்களா? என்பதே கதை.
முந்தைய இரு படங்களும் நகைச்சுவை இல்லை என்கிற குறையைக் கொண்டிருந்ததால், இதைத்தானே கேட்டீங்க இந்தா வாங்கிக்கோங்க என்கிற மாதிரி முழுக்க முழுக்க நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார் சந்தானம். பேய்பங்களாவுக்குள் மேசை இழுப்பறையை இழுத்து வீசுவது உள்ளிட்ட பல காட்சிகள் அவருடைய தனித்தன்மையை நிறுவுகிறது. மிக இயல்பாக அவற்றைச் செய்து இரசிக்க வைக்கிறார் சந்தானம்.
நாயகியாக நடித்திருக்கும் சுரபி, பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் வந்துபோகிறார்.ஏராளமான ஆண்கள் நடமாடும் இடத்தில் அழகிய பெண்ணாக அவர் இருப்பதே ஆறுதல்.
மாறன், சேது, முனீஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், பிபின், தீனா, கிங்ஸ்லி, பிரதீப் ராவத்,ஃபெப்சி விஜயன் ஆகிய அனைவருமே சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் வில்லனாக மிரட்டி வந்த பிரதீப்ராவத் மற்றும் ஃபெப்சிவிஜயன் ஆகியோரும் இவ்வளவு சிரிக்க வைப்பார்கள் என்பது எதிர்பாராதது.
தீபக் குமார்பதியின் ஒளிப்பதிவும் இது நகைச்சுவைப் படம் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. அவர் வைத்திருக்கும் சில கோணங்களே சிரிக்க வைக்கின்றன.
பேய்ப்படங்களுக்கு மட்டுமன்று சிரிப்புப் படங்களுக்கும் பின்னணி இசை முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார் ரோஹித் ஆப்ரஹாம்.
மெலிதான ஒரு கதைக்களத்தை வைத்துக்கொண்டு புகழ்பெற்ற காணொலி விளையாட்டுகள், தற்கால நிகழ்வுகள், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளை நினைவுபடுத்தும் வசனங்கள் ஆகியனவற்றை வைத்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.
எங்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லையென்பது வரவேற்புக்குரியது.
– குமார்











