December 6, 2024
விமர்சனம்

சர்வம் தாள மயம் – திரைப்பட விமர்சனம்

மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்..

ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,, தானும் அதுபோல் சபாவில் மிருதங்கம் வாசிக்க ஆசை கொள்கிறார்.

அவர் பிறந்த சாதி அதற்குத் தடையாக இருக்கிறது. அதைக் காரணம் காட்டி மறுக்கிறார் தந்தை. அவரையும் மீறி நெடுமுடி வேணுவிடம் மிருதங்கம் கற்றுக் கொள்ளப் போகிறார் ஜீ.வி.பிரகாஷ்.

முதலில் மறுத்து பிறகு நெடுமுடி வேணு ஏற்றுக்கொள்கிறார். ஆனாலும் அவருடைய சீடர் வினீத், ஜீ.வி.பிரகாஷை அவமானப்படுத்துகிறார். கொடுமைப் படுத்துகிறார்.

அவற்றைத் தாண்டி ஜீ.வி.பிரகாஷ் மிருதங்கம் கற்றாரா? அவர் நினைத்தது போல சபாவில் வாசிக்க முடிந்ததா? என்பதைச் சொல்கிறது படம்.

கர்நடக இசை உலகில் காணப்படும் சாதிய உணர்வை வெளிப்படுத்துகிறது கதை.சாதியத்துக்கு எதிரான தன் குரலைச் சில சம்ரங்களுக்கு உட்பட்டுப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன்.

நெடுமுடிவேணு நடிப்பு மிகச்சிறப்பு. ஒவ்வொரு காட்சியிலும் பாராட்டுப்பெறுகிறார். ஒடுக்கப்பட்டவர்களின் வலியை குமாரவேல் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜிவி.பிரகாஷுக்கும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வேடம் அமைந்திருக்கிறது. அதற்கு நியாயம் செய்கிற வகையில் நடித்திருக்கிறார்.

கதையின் மையம் வேறொன்றாக இருப்பதால் ஜிவி.பிரகாஷ் – அபர்ணா பாலமுரளி காதலுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனாலும் இலட்சிய வேட்கையோடு இருக்கிற காதலர்களுக்கு இப்படி எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் ஒரு காதலி இருந்தால் வெற்றி நிச்சயம்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவே நடித்திருக்கும் திவ்யதர்ஷினியும் நன்று.

பா(டல்களிலும் பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரகுமான் மிரட்டி இருக்கிறார். இசை சம்பந்தப்பட்ட கதை என்பது அவருக்கு நல்வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்ப்டுத்திகொண்டிருக்கிறார்..

மாருபட்ட நிலப்பரப்புகளையும், அவற்றின் எழிலையும், மலைகளின் பிரம்மாண்டத்தையும் ரவியாதவ் அப்படியே கடத்தி கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

சாதியக் கட்டுமானங்களைக் கடந்தது கலை என்பதைச் சொல்ல வந்த படத்தின், முதல்பாதியில் மிகச்சரியாக அமைந்திருந்த திரைக்கதை, பிற்பாதியில் பாதை மாறி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போய் முடிந்தது பொருத்தமாக இல்லை.

இருந்தாலும் கர்நாடக இசைத்துறையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைத் திரைமொழியில் பதிவு செய்திருக்கும் ராஜீவ்மேனன் பாராட்டுக்குரியவர்.

Related Posts