விமர்சனம்

எல் ஜி எம் – திரைப்பட விமர்சனம்

மாமியார் மருமகள் சண்டை உலகப்பிரசித்தம். அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்று எண்ணியதன் விளைவு எல்ஜிஎம்.

இதை உயர்நடுத்தர வர்க்கப் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள்.

மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன ஹரீஷ்கல்யாணுக்கு நாயகி இவானா மீது காதல். அவரும் இவரை விரும்புகிறார்.
அதேசமயம், ஹரீஷ்கல்யாணின் அம்மாவை இவானாவுக்கு பிடிக்கவில்லை.

அப்பா இல்லாமல் அம்மாவின் அரவணைப்பிலேயே சிறுவயதிலிருந்து வளர்ந்து வந்த ஹரீஷ்கல்யாண், அம்மாவா? காதலியா? எனும் நிலை வரும்போது அம்மா பக்கமே நிற்கிறார்.

அதன்பின் ஒரு சமரச உடன்பாடு ஏற்பட்டு மூவரும் தொலைதூரப் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் அம்மாவும் காதலியும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வார்கள் என்பது எதிர்பார்ப்பு. அது நிறைவேறியதா? என்பதைச் சொல்வதுதான் படம்.

ஹரீஷ்கல்யாணுக்கு இந்தமாதிரி வேடம் புதிதில்லை. அதனால் இயல்பாகப் பொருந்தி தேவையான அளவு நடித்துள்ளார்.

இவானாவின் எளிய அழகு பலம். எனக்கு ஒரு ஐடியா என்று அவர் சொல்வது இரசிக்கும்படி அமைந்திருக்கிறது. குணத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நெருடல்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார் நதியா. முற்பாதியில் கொஞ்சம் சுணங்கினாலும் பிற்பாதியில் ஈடு செய்துவிடுகிறார்.

யோகிபாபும் ஆர்ஜே.விஜய்யும் சிரிக்க வைப்பதற்கென்றே இருக்கிறார்கள். அதில் குறை வைக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் விஸ்வஜித், படம் தரமாவகவும் உயர்தட்டு நாகரிகமாகவும் இருக்க மெனக்கட்டிருக்கிறார்.

இயக்குநரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பாடல்கள் கேட்கலாம், பின்னணி இசையில் குறைவில்லை.

தம்பதியினர் தங்களுக்குள் அன்பாக இருந்தாலும் குடும்ப உறவுகளால் அதிகச் சிக்கல்கள். குறிப்பாக மாமியார் மருமகள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியாக இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்.

சில பல குறைகளைத் தாண்டி இந்தக் கருத்துருக்காக பார்க்கலாம்.

– குமார்

Related Posts