டைனோசர்ஸ் – திரைப்பட விமர்சனம்
தமக்கென சில தனித்துவங்களைக் கொண்டிருக்கும் வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் அந்த வரிசையில் சேருகிறது.
உலக அளவில் புகழ்பெற்ற சொல் டைனோசர்ஸ். அதை ஆங்கிலத்தில் எழுதி புதிய பொருள் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன்.
நாயகன் உதய்கார்த்திக் அவருடைய அண்ணன் ரிஷி. ரிஷியின் நண்பர் மாறா இவர்களில் மாறா ஒரு தாதாவிடம் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் திருந்தி வாழ்ந்தாலும் அவரை விடாது தொடரும் சிக்கல் மாறா கொலை செய்யப்படுவதில் முடிகிறது.
அந்தக் கொலைக்கு நாயகனும் ஒரு காரணம் என்கிற முடிச்சைப் போட்டு அதை எப்படி அவிழ்க்கிறார்கள் என்பதுதான் கதை.
நாயகன் உதய்கார்த்திக், வடசென்னையில் பிறந்து வாழ்ந்தவர் போலவே இருக்கிறார். சண்டைக் காட்சிகள் காதல்காட்சிகள் ஆகியனவற்றில் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சாய்பிரியாதேவா, கோபம்,சிக்கல், சண்டை சச்சரவு எனப்போகும் கதைக்குள் ஆறுதல் தரும் அழகாக இருக்கிறார்.
ரிஷி, மாறா ஆகியோர் தத்தம் வேடங்களின் பொறுப்பை உணர்ந்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி பல பரிதாபத் தாய்களின் பிரதியாக இருந்து கவனிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார் புகைப்படக்கலைஞர் மேனக்ஷா.அவருடைய முகமும் உடல்மொழியும் வில்லத்தனத்துக்குப் பக்காவாகப் பொருந்தியிருக்கிறது.
ஜோன்ஸ் வி.ஆனந்த்தின் ஒளிப்பதிவு காட்சிகளின் தன்மையைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறது. சண்டைக்காட்சிகள் இரசிக்க வைக்கின்றன.
போபோசசி இசையமைத்திருக்கிறார். பொருத்தமான தேர்வு. பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார்.
கலைவாணனின் படத்தொகுப்பு முற்பாதியில் பலம்.பிற்பாதியில் பலவீனம்.
எழுதி இயக்கியிருக்கும் எம்.ஆர்.மாதவனுக்கு இது முதல்படம். அப்படித் தெரியாதவண்ணம் உழைத்திருக்கிறார். காட்சியமைப்புகளும் நடிகர்களிடம் பெற்றிருக்கும் நடிப்பும் நன்று. திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளைச் சரிசெய்திருக்க வேண்டும்.அதைத்தாண்டி, வசனங்கள் மற்றும் வடசென்னை காட்சிப்படுத்தலில் தன்னை அடையாளப்ப்டுத்திக் கொண்டிருக்கிறார்.
– ஈசுவரன்











