செய்திக் குறிப்புகள்

பிறமொழி நடிகர்கள் சிக்கல் – நடிகர் நாசர் விளக்கம்

தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்கத் (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.*

அவர் கூறியுள்ளதாவது……

மற்ற திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ்த் திரையுலகில் இருந்து இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் இந்தச் சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்

தமிழ்த் திரையுலகில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழ்ப் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியசான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல.

எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணிஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ்த் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இந்தச் செய்தியை சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.உலக அளவில் அதைக் கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும். நாம் அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்..

நன்றி!
நாசர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts