செய்திக் குறிப்புகள்

அமீர்கானின் பிகே படத்துக்கும் ஜீனியஸ் படத்துக்கும் ஒற்றுமை உள்ளது – நாயகி பிரியாலால் வெளிப்படை

சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் நாயகனாக நடிக்கும் ஜீனியஸ் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் கேரளத்து வரவு பிரியாலால்.

அக்டோபர் 26 அன்று வெளியாகவிருக்கும் ஜீனியஸ் படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்….

நான் மலையாளி. எனக்கு மலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம்.

இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது.

‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன்.

வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின்.

நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன்.

இப்படத்தில் நான் நடித்த முதல் காட்சி க்ளைமாக்ஸ் தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனை கூட அந்த கதாபாத்திரத்தைக் கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன்.

அதேபோல் சுசீந்திரனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்வார். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே பின்பற்றுவேன்.

மேலும், பல பேருக்கு இந்தப் படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளிப் பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது.

இந்தப் படத்தில் இரண்டு ஜீனியஸ் இருக்கிறார்கள். ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா, இன்னொருவர் சுசீந்திரன். இந்த இரண்டு ஜீனியஸ் இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.

யுவனின் மிகப் பெரிய விசிறி நான். எனக்கு மிகவும் பிடித்தது பாடல் ‘சிலுசிலு’ பாடல் தான்.

அமீர்கானின் PK படம் மாதிரி உளவியல் ரீதியான முக்கியத்துவம் இப்படத்திலும் இருக்கும். ‘வெண்ணிலா கபடிக் குழு’வும், ‘நான் மகான் அல்ல’ படமும் எனக்கு மிகவும் பிடித்த படம்.
ரோஷனும் நானும் புது வரவு. இருப்பினும் அவர் எப்போதும் நேர்மறையான எண்ணம் கொண்டவர். அவரைச் சுற்றி நேர்மறையான அதிர்வு இருந்துகொண்டே இருக்கும். அவருக்கும் நடிப்பு என்பது மிகவும் பிடித்தமான விஷயம்.

Related Posts