செய்திக் குறிப்புகள்

காலா படவெளியீடு தள்ளிப்போகிறது – விஷால் அறிவிப்பு

திரையுலக வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் ஏப்ரல் 17 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்க நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கூட்டம் நடந்தது,

அதன்பின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 18 இரவு நடைபெற்றது.

இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது…

தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமாக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.

சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி.அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது.காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுக்க டிக்கெட் விற்பனை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் விஷால்.

Related Posts