விமர்சனம்

கால் டாக்ஸி – திரைப்பட விமர்சனம்

கால்டாக்ஸி ஓட்டுநரைக் கொலை செய்துவிட்டு வண்டியுடன் கொலைகாரர்கள் தப்பியோட்டம் என்று அவ்வப்போது செய்திகளில் பார்ப்போம்.

ஏன் அப்படி நடக்கிறது? கடத்தப்படும் வண்டிகள் என்னவாகின்றன்? என்பதையெல்லாம் ஒரு கதையாக்கி அதற்குள் காதல், பாசம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதையாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கால் டாக்ஸி.

கால்டாக்ஸி ஓட்டுநராக நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன் வேடம் தன்னம்பிக்கையூட்டும்படி அமைந்திருக்கிறது. அவரும் வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

நாயகி அஸ்வினி சந்திரசேகர் அழகாக இருக்கிறார். வழக்குரைஞராக இருந்தபோதும் நாயகனின் நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்ளும் வேடம். அதை நிறைவாகச் செய்திருக்கிறார். ஒரு முக்கியமான நேரத்தில் காதலன் தவிர்க்கிறார் எனும்போது காதல்தவிப்பை நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.

கால்டாக்ஸி ஓட்டுநர்களாக நடித்திருக்கும் நான் கடவுள் ராசேந்திரன், போராளி திலீபன் உள்ளிட்டோரும், காவல்துறையினராக நடித்திருக்கும் சேரன்ராஜ், இயக்குநர் ஈ.ராமதாஸ்,உள்ளிட்டோரும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள். கொலைகாரக்கூட்டத்தில் முதன்மையானவராக இருக்கும் நிமல் கவனிக்க வைக்கிறார்.

எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு அளவு. பாடல்காட்சிகளைப் படம்பிடித்ததில் அவருடைய ரசனை இளைஞர்களைக் கவரும்.

இசையமைத்து பாடல்களை எழுதியிருக்கிறார் பாணர். கதைக்குள் உழைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு செய்திருக்கும் டேவிட் விஜய், படத்தை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.

இதுவரை கால்டாக்ஸி ஓட்டுநர்கள் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் அவநம்பிக்கைகளைப் போக்கி அவர்கள் மீது மதிப்பு ஏற்பட வைத்திருக்கிறார்.

திருடப்படும் வண்டிகள் என்னவாகின்றன என்கிற விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது.திடீர்திருப்பம் கொண்ட இறுதிக்காட்சி படத்துக்குப்பலம்.

Related Posts