விமர்சனம்

ஜிப்ஸி – திரைப்பட விமர்சனம்

மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்லிக் கொண்டு அதற்கு நேரெதிராக எல்லாவற்றையும் மத அடிப்படையில் அணுகும் ஆபத்தான போக்கில் இந்தியா இருக்கும் நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை ஓங்கிச் சொல்ல வந்திருக்கிறது ஜிப்ஸி.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து அப்பாவுக்கும் இஸ்லாமிய அம்மாவுக்கும் பிறந்த குழந்தை ஜிப்ஸி. பாகிஸ்தான்காரர்கள் போட்ட குண்டில் பெற்றோர் இறந்துவிட தனியே கதறும் அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் ஒரு நாடோடி.

அவருடன் இந்தியா முழுக்கச் சுற்றி குதிரை நடனம் செய்து பிழைத்துவரும் ஜிப்ஸிக்கு தமிழகத்தில் இஸ்லாமியப் பெண் வகிதா மீது நாட்டம். அந்தப் பெண்ணுக்கு இவர் மீது காதல்.

திருமணத்துக்கு முந்தைய நாள் ஜிப்ஸியுடன் வீட்டை விட்டு வெளியேறி, வடக்கே சென்று ஜிப்ஸியை மணமுடிக்கிறார் நாயகி வகிதா. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். 

அந்நேரம் இஸ்லாமியர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கும் ஒரு கலவரத்தில் சிக்குகின்றனர். அதன்பின் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கின்றனர். 

இறுதியில் நடக்கும் நிகழ்வு அந்தக் குடும்பத்துக்கும் இந்த நாட்டுக்கும் ஒரு பெரிய செய்தியைச் சொல்கிறது. அதுதான் இந்தப் படம்.

ஜிப்ஸி எனும் நாடோடி வேடத்துக்குப் பொருத்தமான தோற்றத்தில் இருக்கிறார் ஜீவா. சே என்று பெயரிடப்பட்ட அவரது குதிரையிடம் அவர் உரையாடும் காட்சிகள் அழகு. 

காதல்காட்சிகளில் உருக வைக்கும் அவர் கலவரக்காட்சிகளில் பதற வைக்கிறார். சிறுநீர் கழிக்க அனுமதி கேட்கும்போது மேலும் மேலும் தண்ணீர் குடிக்க வைக்கும் காவல்துறையை அவர் பழிவாங்கும் விதம் சிறப்பு.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் நடாஷாசிங், பார்த்தோரை மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கும் வெள்ளை அழகு. வெறியோடு வெட்ட வருகிறவர்களிடம் கையெடுத்து அவர் இறைஞ்சுகிற காட்சி கல்நெஞ்சையும் கலங்க வைக்கும்.

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் லால்ஜோஸ், இஸ்லாமியர்களின் மதநம்பிக்கை காரணமாக அந்த வீட்டுப் பெண்கள் படும்பாட்டை உணரவைக்கிறார்.

இந்தியாவின் அமைதிக்காகப் பாடும் சுசீலாராமனின் பாத்திரப்படைப்பு நன்று. 

ஆக்ரோசமாகக் கைகளில் வாளேந்தி எதிர்ப்படும் இஸ்லாமியர்களை வெட்டிச் சாய்க்கும் சோனுகுமார், இந்துன்னு சொல்லித்தான் இத்தனையையும் செய்யச் சொன்னாங்க, ஆனா கோயிலுக்குள் போனதும் தீட்டுன்னு சொல்லி கைகளை வெட்டிட்டாங்க எனும் போது இந்துமதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகள் முகத்திலறைகின்றன.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம்,தேசாந்திரி மகிழ வைக்கிறது, மனமெல்லாம் மாய ஊஞ்சல் இளக வைக்கிறது. பின்னணி இசையும் பொருத்தம்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் இந்தியாவின் இயற்கை அழகையும் செயற்கைக் கொடுமைகளையும் அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

கருத்தாழமிக்க கதையைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்த திரைப்படமாகக் கொடுக்க எண்ணி
குஜராத் கலவரங்களின் புகைப்பட சாட்சிகளான இருவரை முன்வைத்து இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் படைப்பாயுதம் ஏந்தியிருக்கிறார்  இயக்குநர் ராஜுமுருகன்.

திரைக்கதையில் சில குளறுபடிகள் இருந்தாலும் அவற்றை மீறி மாந்தநேயம் பேசும் நோக்கிற்காக அவரைப் பாராட்டலாம்.  

Related Posts