பப்பி – திரைப்பட விமர்சனம்
அறிமுக நாயகன் வருண் கல்லூரி மாணவர். அவருக்கு ஆபாச புத்தகங்கள் படிப்பது ஆபாச காணொலிகள் பார்ப்பது ஆகியனதான் பொழுதுபோக்கு.
அவருக்கு ஒரு காதல்.நாயகி சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலர்கள் எல்லை மீறிப் போக சம்யுக்தா கர்ப்பம், ஆகிறார். அதனால் என்னென்ன சிக்கல்கள்? அவர் என்னவாகிறது? என்பதைச் சொல்லும் படம் தான் பப்பி.
வீட்டுக்கும் அடங்காமல் கல்லூரியிலும் சரியாகப் படிக்காமல் அலையும் மாணவர்களின் சரியான பிரதிநிதி வேடம் நாயகன் வருணுக்கு. அறிமுக நாயகன் என்று தெரியாத அளவுக்கு வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார். உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளில் இன்னும் முன்னேற்றம் வேண்டும்.
நாயகி சம்யுக்தா ஹெக்டே நல்ல தேர்வு. அளவாக இருக்கிறார். சரியாக நடித்திருக்கிறார்.
படம் முழுக்க நாயகனுடன் வருகிற வேடம் யோகிபாபுவுக்கு. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் இயக்குநர் நட்டிதேவ் நன்று.தொடர்ந்து நடிக்கலாம்.
மாரிமுத்து, வெங்க்டேஷ், நித்யா, ரிந்துரவி உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
தரண்குமார் இசையில் பாடல்கள் கேட்கலாம்.அனிருத்,கெளதம் மேனன் ஆகிய பிரபலங்கள் பாடியிருக்கிறார்கள்.பின்னணி கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது.
தீபக்குமார்பாடியின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.
பப்பி என்கிற பெயர் வைத்ததோடு படம் முழுக்க ஒரு நாயை நடிக்க வைத்தது எதற்கு? என்று தொடக்கத்தில் தோன்றும் சந்தேகத்துக்கு இறுதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குநர் முரட்டு சிங்கிள் எனும் நட்டி தேவ்.
நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் கிளுகிளுப்புக் காட்சிகளை வைத்துவிட்டுக் கடைசியில் நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.











