விமர்சனம்

டாணாக்காரன் – திரைப்பட விமர்சனம்

ஆளும் வர்க்கத்தின் ஏவல்துறையாக மாறிப்போனதால் காவல்துறையைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள் அறுவெறுப்படைகிறார்கள் சமயங்களில் கோபப்படுகிறார்கள். டாணாக்காரன் படம் பார்த்தால் அவர்கள் எல்லோருமே காவல்துறையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள்.

காவல்துறை பயிற்சி மையம் என்கிற ஒரே மைதானத்தில் பல்வேறு உணர்வுகளைக் கடத்தி சிறப்பாக விளையாடியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.

பயிற்சிக்காக மைதானத்துக்குள் வந்தவுடன் அந்த மண்ணைத் தொட்டு வணங்கி பரவசத்துடன் அந்த மைதானத்தைச் சுற்றிப் பார்ப்பதில் தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் மிகச்சிரத்தையோடு நடித்திருக்கிறார் விக்ரம்பிரபு. அவருடைய நடிப்புப் பயணத்தில் இப்படம் முக்கியஇடம் பிடிக்கும்.

பயிற்சிமையத்தின் உயரதிகாரிகளாக நடித்திருக்கும் லால், மதுசூதனராவ் ஆகியோர் அதிகார ஆணவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. நன்றாக நடித்து பயப்பட வைத்திருக்கிறார்கள்.

தீமை இருக்கும் இடத்தில் சிறிதளவு வெளிச்சமாக நன்மையும் இருக்கும் என்பதற்கு போஸ்வெங்கட் கதாபாத்திரம். அவரும் அருமையாக நடித்து அதற்குப் பலம் சேர்த்து நமக்கும் சிறிது ஆறுதல் தருகிறார்.

பெரும்பான்மை மக்களின் அல்லது பெரும்பான்மை காவல்துறையின் பிரதிநிதி போல் அமைந்திருக்கிறது எம்.எஸ்.பாஸ்கரின் வேடம். மிகப்பொருத்தமாக நடித்துக் கலங்கவைத்துவிடுகிறார் அவர்.

சித்தப்பா என்றழைக்கப்படும் வேடத்தில் நடித்திருக்கும் பிரகதீசுவரனுக்கு இந்தப்படம் பெரும் பலம். மனிதத்துக்கு மதிப்பில்லாத அரசு இயந்திரத்திடம்  பல ஆண்டுகள் போராடி ஓர் உரிமையைப் பெற்று பயிற்சிக்கு வந்தால் அங்கு நடக்கும் கொடுமைகள் கண்டு புழுங்குவதும் வெகுண்டெழுவதும் நன்று. 

நாயகனின் உற்ற தோழனாக வரும் பாவலின் வேடமும் அதற்கான அவருடைய அர்ப்பணிப்பும் படத்துக்குப் பலம்.

முருகன் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் கார்த்திக் கவனிக்க வைக்கிறார். கடைசியில் அவரைச் சுற்றியே எல்லாம் நடக்கிறது. அப்போது மிகப்பொறுப்புடன் நடந்துகொள்கிறார்.

பாலைவனச்சோலையாக வருகிறார் அஞ்சலிநாயர். ஒரேயொரு காட்சியில் அவர் பாவாடைதாவணியில் வலம்வருவதே கண்களுக்கும் மனதுக்கும் இதமாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இது ஒரு படம் என்பதை மறந்து மைதானத்தில் நம்மையும் ஒரு பார்வையாளர் போல் உணரவைத்திருக்கிறார்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு இயைந்திருக்கின்றன. பின்னணி இசை அளவு.

பிலோமின்ராஜின் படத்தொகுப்பு சிறப்பு. நாயகனின் முன்கதை உட்பட பல காட்சிகளை வாழைப்பழத்தில் ஊசி செருகுவதுபோல் செருகி வைத்திருக்கிறார்.

ஒரு மைதானத்தை மட்டுமே மையமாகக் கொண்டு கதை எழுதி அதே மைதானத்துக்குள் மொத்தப் படப்பிடிப்பும் நடத்தி இதுவரை உலகம் அறியாத ஓர் உலகத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தமிழ், அதற்குள்ளேயே காவல்துறை வரலாறு, அங்கு நிலவும் ஆண்டான் அடிமை முறை, மனித உணர்வுகள், அவற்றின் பலம் பலவீனம் ஆகிய எல்லாவற்றையும் உள்வைத்துத் திரைக்கதை அமைத்து தன் பலத்தைக் காட்டியிருக்கிறார்.

வெள்ளையர்கள் இடத்தில் தங்களை வைத்து ஆதிக்கம் செலுத்தும் ஆணவ அதிகாரத்துக்கு இப்படம் சம்மட்டி அடி. 

Related Posts