மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி – விமர்சனம்
ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனித்து வாழவியலாதா? என்கிற கேள்வி எப்போதோ எழுப்பப்பட்டுவிட்டது. இப்போது ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கும் படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி.
ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா.முதிர்ச்சியான வேடம், அதற்குப் பொருத்தமான பாவங்களை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார்.திருமணம், காதல் ஆகியனவற்றையும் அவரைக் காதலிக்கும் நவீன்பொலிஷெட்டியைக் கையாளும் விதத்திலும் தன் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.
நாயகன் நவீன்பொலிஷெட்டி, இளமையும் துடிப்பும் நிறைந்தவர்.இந்தப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவையாளர் கதாபாத்திரத்துக்கும் நியாயம் செய்திருக்கிறார்.தன்னைவிட மூத்தவரான அனுஷ்காவைக் காதலிப்பதை நடிப்பின் மூலம் எளிதாக்கியிருக்கிறார். அனுஷ்காவை வேறுவிதமாக அணுகத் தயாராகும் காட்சிகளில் சிரிப்பு மழை.
முரளிசர்மா, துளசி உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ரதனின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையிலும் குறைவைக்கவில்லை.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். நகைச்சுவை அதிகம் எனும்போது வசனங்களுக்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். அதையும் தாண்டி கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தி காட்சிகளை இரசிக்க வைத்திருக்கிறார்.
உலகத்திரைப்படங்கள் உள்ளூரிலும் தாராளமாகக் கிடைக்கக்கூடிய காலகட்டம். புதிய கதைக்கரு தேடுபவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் வாழ்முறைக்கு ஏற்ப எடுக்கப்படும் படங்களைப் பார்த்து பாதிப்புக்கு ஆளாகி அதேபோல் இங்கும் படம் செய்வோம் என்று நினைக்கிறார்கள்.
இந்தப்படத்தின் இயக்குநர் மகேஷ்பாபு.பி யும் அப்படி ஒரு கதைக்கருவைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.அதேசமயம் இது நம் நாட்டில் எடுபடுமா? என்கிற பயமும் வந்துவிட்டது. அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு மாதிரி சமாளித்திருக்கிறார்.சிக்கலான இந்தத் திரைக்கதை மீது நகைச்சுவையைத் தூவி இரசிக்க வைத்துவிட்டார்.
– குமரன்











