சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் படத்தில் 3 நாயகிகள் – முதன்மை இவர்தான்

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன், இப்போது கவினை கதாநாயகனாக வைத்து ஸ்டார் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியாகி வரவேற்புப் பெற்றது.

பியார் பிரேமா காதல் படம் போல இந்தப்படத்தின் கதையும் காதலை அடிப்படையாகக் கொண்டதுதானாம். அதனால் படத்தில் மூன்று நாயகிகள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கவினைத் திருமணம் செய்து முதன்மை பெறுபவராகவும் இருப்பாராம்.

இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தும் நாயகி தேடல் நிறைவு பெறாமல் இருந்தது. பல மாற்றங்களுக்குப் பின் முதன்மை நாயகியை முடிவு செய்துவிட்டார்களாம்.

இந்தியில் புகழ்பெற்ற ஷீ மற்றும் ஆஸ்ரம் ஆகிய இணையத் தொடர்களில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் அதிதி போகங்கர்.

இவர்தான் ஸ்டார் படத்தில் கவினுக்கு முதன்மை இணையராக நடிக்கவிருக்கிறார்.இவர் ஏற்கெனவே தமிழில் நடித்திருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்படாமல் போன படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் இருந்த பல நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

அந்தப்படத்துக்குப் பிறகு தமிழ்ப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் இந்தியில் கவனம் செலுத்தியவரை ஸ்டார் படத்துக்காக இப்போது அழைத்து வருகிறார்கள்.

புகழ்பெற்ற நடிகை அனுஷ்கா, தமிழில் நடித்த முதல்படம் ரெண்டு. அந்தப்படம் ஓடாததால் தெலுங்கில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். அங்கு புகழ்பெற்றதும் பெரிய நாயகர்களின் படங்களின் நாயகியாக தமிழுக்கு வந்தார்.

அனுஷ்கா போலவே அதிதியும் இப்படத்துக்குப் பிறகு தமிழில் புகழ்பெறுவார் என்கிறார்கள்.

Related Posts