விமர்சனம்

ஜவான் – திரைப்பட விமர்சனம்

இந்தி முன்னணி நடிகர் ஷாருக்கான் கதாநாயகன் என்றாலும் நாயகியாக நயன்தாரா,எதிர்நாயகனாக விஜய்சேதுபதி,முக்கிய வேடத்தில் பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்களும் ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, இசை அனிருத், படத்தொகுப்பு ரூபன், கலை இயக்கம் முத்துராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இருப்பதால் இதை நேரடித்தமிழ்ப்படம் என்றாலும் தவறில்லை.

ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களுக்கும் தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டுகிறார். நடனக்காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும் அவருடைய வேகம் வியக்கவைக்கிறது.

ஒருவருக்கு இணை தீபிகாபடுகோன், இன்னொருவருக்கு இணை நயன்தாரா.இருவரோடும் காதல்காட்சிகளிலும் சோடைபோகவில்லை.மெட்ரோ ரயில்காட்சி கொள்ளையடிக்கும் காட்சி ஆகியனவற்றில் முத்திரை பதிக்கிறார்.

நயன்தாரா மிடுக்குடன் வருகிறார். ஷாருக்கானை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி அவரையே காதல்மணம் புரிகிறார். திருமணத்துக்கு முந்தைய நயன்தாரா பாத்திரம் கமல் படங்களில் மட்டுமே பார்த்த பாத்திரம்.

இந்திய ஒன்றியத்தில் மிகப்பெரும் செல்வாக்குள்ள நபராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. எந்த வேடம் கொடுத்தாலும் இயல்பாகச் செய்து அசத்தும் அவர் இந்த வேடத்திலும் குறைவைக்கவில்லை.

தீபிகா படுகோன்,பிரியாமணி, சான்யாமல்ஹோத்ரா, யோகிபாபு உள்ளிட்டோர் ஷாருக்கானின் அலையில் தப்பி தனியாகத் தெரிகிறார்கள்.

படம் மிகப்பிரம்மாண்டமாகத் தெரிய பெரிதும் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. திரைக்கதையில் இருக்கும் தவறுகளைக் காட்சிகள் மறைத்துவிடுகின்றன.

பாடல்களில் தன்னைக் காட்டிவிட்ட அனிருத், பின்னணி இசையில் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். ஷாருக்கானின் வேடங்களை எழுத்தில் எழுதியதைக் காட்டிலும் பின்னணிஇசையில் பெரிதாக எழுதியிருக்கிறார் அனிருத்.

இந்தியாவின் முன்னணி நடிகரின் படமா இது? என்று ஆச்சரியப்படும் வகையில் வசனங்களிலும் காட்சிகளிலும் சமுதாய அக்கறையும் பொறுப்புணர்வும் நிரம்பி வழிகிறது.

விவசாயிகளின் சிக்கல்கள் பேசப்பட்ட விதம், அவர்கள் வங்கிக் கணக்கில் பணம், உத்தரபிரதேசத்தில் உயிர்க்காற்றான ஆக்சிஜன் இல்லாமல் இறந்த குழந்தைகள் பற்றிய காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் அதிசயிக்க வைக்கின்றன.

திரைக்கதையில் இருக்கும் குறைகளை நேரடியாக ஆளும் அரசை எதிர்த்து ஷாருக்கான் பேசும் வசனங்கள் மறக்க வைக்கின்றன. அது மட்டுமின்றி மக்கள் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டு பொருத்தம்.

வெகுமக்கள் இரசிக்கின்ற, பல்லாயிரம் இரசிகர்களைக் கொண்ட பெரிய நாயகர்களை அவர்கள் இருக்கும் இடத்தை விட இன்னும் சில மடங்கு உயர்த்தக்கூடிய மாயம் செய்பவர் அட்லீ. இந்தப்படத்திலும் அதைச் சிறப்பாகச் செய்துள்ளார்.

– செல்வன்

Related Posts