விமர்சனம்

க்ளாப் – திரைப்பட விமர்சனம்

விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவெங்குமே ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதையும் மற்ற பிரிவினர் அத்துறையில் நுழைந்துவிடாமல் முடிந்தவரை தடுத்துவிடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன சில திரைப்படங்கள்.

அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது க்ளாப்.

இப்படி ஒரு கதாநாயகனின் அறிமுகக்காட்சி எந்தப்படத்திலும் வந்திருக்காது எனும்படி பார்ப்போரைப் பதறவைத்து அறிமுகமாகிறார் ஆதி.

திடகாத்திரமான அவர் ஒரு கால் இல்லாமல் படும் கஷ்டங்கள், அவற்றைத் தாண்டிய அசாத்திய மனவுறுதி ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது என் படம் என்று எந்நாளும் அவர் பெருமை கொள்ளலாம்.

ஆதியின் மனைவியாக வரும் ஆகான்ஷாசிங், கண்களாலேயே கவர்கிறார். இப்படி ஒரு காதலியும் மனைவியும் அமையும் ஆண்கள் பாக்கியவான்கள். க்ரிஷாகுருப்பிடம் அவர் பேசும் வசனங்கள் சிறப்பு. அதை மிகச்சரியான பாவனைகளோடு வெளிப்படுத்தியிருக்கிறார் ஆகான்ஷாசிங்.

ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடித்திருக்கும் க்ரிஷாகுருப் படத்துக்குப் பெரும்பலம். அப்பாவித்தனமான தோற்றம், அபாரமான திறமை கொண்ட அந்தப்பாத்திரத்துக்கு உயிரூட்டி உயர்ந்து நிற்கிறார். உடலழகோடு தேவைக்கேற்ற நடிப்பும் உள்ள இவரிடம் எந்த வேடத்தையும் நம்பிக்கொடுக்கலாம்.

முனீஸ்காந்தின் வேடம் நன்று. அவரும் அதற்கு முழுநியாயம் செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள வில்லனாக நாசர். அதை அவரைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது.

பிரகாஷ்ராஜ் வழக்கம்போல பொருத்தம்.

பிரவீன்குமாரின் ஒளிப்பதிவு கதையோட்டத்தோடு இணைந்து இனிமை செய்கிறது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் காட்சிகளின் வலியைச் சொல்லிச் செல்கின்றன. பின்னணி இசை இயல்பு.

பழைய கதை பார்த்த காட்சிகள் என்றாலும் கடைசிவரை பதைபதைப்போடு கண்ணிமைக்காமல் காண வைத்திருப்பது இயக்குநர் பிரித்வி ஆதித்யாவின் வெற்றி.

Related Posts