இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாகும் ஓ மை டாக் – அருண்விஜய் மகிழ்ச்சி
அருண்விஜய் அவர் மகன் அர்ணவ் விஜய் அவருடைய அப்பா விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓ மை டாக். இவர்களோடு மகிமா நம்பியார், வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.புது இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார்.
அண்மையில் வெளியான “ஓ மை டாக்” திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது.
ஜோதிகா-சூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் ஆர்பி டாக்கீஸ் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு ஆகிய இருவரும் இணை தயாரிப்பாளர்கள்.
இப்படத்துக்கு இசை நிவாஷ் பிரசன்னா, ஒளிப்பதிவு கோபிநாத்.
இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில்,அமேசான் ப்ரைம் வீடியோவில், இந்தியா உட்பட 240 நாடுகளின் பகுதிகளில் ஏப்ரல் 21, 2022-ல் வெளியாகவுள்ளது.
இப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ) அவனது செல்லப்பிராணி சிம்பாவிற்கும் இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பைப் பற்றிய கதையைக் கூறுகிறது.
முன்னோட்டத்தில் பார்த்தது போல், நாய் பிரியர்கள் சந்தோசப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை எடுத்துகொள்ளும் படமாக இது இருக்கும்.
இயக்குநர் சரோவ் சண்முகம் இப்பட உருவாக்கம் பற்றிக் கூறியதாவது…..
இந்தப் படத்திற்காக 100 க்கும் மேற்பட்ட நாய்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியாற்றியுள்ளோம்.நாங்கள் முதலில் ஒரே மாதிரி இருக்கும் மூன்று நாய்களை வாங்கி அதற்குப் பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பிற்கு முன்னர், 5-6 வயதுடைய நாய்க் குட்டியை அதே கலரில் கொண்டு வந்தோம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை நாய்களின் உயரத்தில் மாற்றம் ஏற்படும். அதற்கு நாங்கள் பிளான் பி வைத்திருந்தோம்.
இந்தக் கணிப்புகளையும், நேரத்தையும் கவனிப்பதில் நாங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்தோம்.பயிற்சியாளர் ராஜா, நாய் ஹாஸ்டல் வைத்திருந்தார். அங்கு தான் பயிற்சிகள் கொடுத்தார். படத்தில் விளையாட்டுப் போட்டி ஒரு பிரதானமான விசயம், நான் அவரை ஊக்குவித்து நாய்கள் எப்படி விளையாட வேண்டும் என்ற பயிற்சியை கொடுக்கச் சொன்னேன். இது உலகம் முழுக்க உள்ள ஒரு சாம்பியன்ஷிப் போட்டி. அது இங்கும் நிகழ்கிறது.
ஓ மை டாக் திரைப்படம், அர்ஜூன் மற்றும் அவனது நாய்க் குட்டி சிம்பாவிற்கும் இடையே இருக்கும் காதல் மற்றும் அரவணைப்பைக் கூறும் ஒரு உணர்வுப் பூர்வமான கதை. அர்ஜூன் சிம்பாவைச் சந்திக்கிறான், அது அவனைக் காப்பாற்றுகிறது. அவன் அதை அவன் சொந்த நாய் போல் வளர்க்கிறான். பின்னர் அர்ஜூன் மற்றும் சிம்பா அவர்கள் பாதையில் வரும் தடங்கல்களைக் கடந்து வெற்றிப்பாதையை அடைகிறார்கள். இதுதான் படத்தின் கதை என்கிறார்.
100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி நடிகர் அருண் விஜய் பகிர்ந்துகொண்டதாவது….,
இவ்வளவு நாய்களுடன் ஒரே நேரத்தில் வேலை செய்வது சவாலான விசயமாக இருந்தது. 100-க்கும் மேற்பட்ட நாய்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளது. பயிற்சியாளர் ராஜாவிற்கு ஒரு பெரிய நன்றி. மேலும் இயக்குநர் சரோவ், எல்லா விசயங்களும், சிக்கலில்லாமல் செல்ல அதிகக் கவனம் செலுத்தினார். இந்த அழகான கதையில் இணைந்து பணியாற்றியது எங்கள் அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சி
இவ்வாறு அவர் கூறினார்.











