கொம்பு – திரைப்பட விமர்சனம்
நாயகன் ஜீவா திரைப்படம் இயக்குவதற்காக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.நாயகி திஷா பாண்டே ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார்.
இருவரும் சேர்ந்து மர்ம மரணங்கள் நிகழும் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு நடந்தவற்றை ஆய்வு செய்கின்றனர்.
அப்போது நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையும் பயச்சுவையும் கலந்து கொடுத்திருக்கும் படம்தான் கொம்பு.
நிஜத்தில் ரஜினி ரசிகரான நாயகன் ஜீவா, படத்தில் அவர் போலவே நடிக்க முயன்றிருக்கிறார். அவர் எண்ணத்துக்கேற்ப, வில்லனை அவர் அடிக்கும் நேரத்தில் பின்னால் பிரகாசமாக விளக்கை எரியவிட்டு பாட்ஷா ரஜினி போல் அவரைக் காட்டியிருக்கிறார்கள்.அருகிலே பாடல்காட்சியில் வெறொரு முகம் காட்டுகிறார் ஜீவா.
திஷா பாண்டே, கொடுத்த வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக உடை விசயங்களில் தாராளம் காட்டியிருக்கிறார்.
காயத்ரி,புவிஷா ஆகியோர் வரும் காட்சிகள் இளைஞர்களைக் கவரக்கூடியதாக இருக்கின்றன.
பாண்டியராஜன், ஈஸ்வர் சந்திரபாபு, லொள்ளுசபா சாமிநாதன், கஞ்சாகருப்பு ஆகியோர் அவ்வப்போது நகைச்சுவை செய்கிறார்கள்.
வில்லனாக வரும் யோகிராம் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
சுதீப்பின் ஒளிப்பதிவில் கிராமத்துக்காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. அதிக அளவில் இரவுக்காட்சிகள் இருக்கின்றன. அவற்றை நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்.
தேவ்குருவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் நன்று.
அண்மைக்காலமாகப் பேய்ப்படங்களில் அறிவியலுக்கு முரணாக பேய் இருப்பதாகவே சொல்கிறார்கள். ஆனால் இந்தப்படத்தில் பேய் பெயரில் ஆசாமிகள் செய்யும் அழிச்சாட்டியங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இப்ராகிம்.
திரைக்கதையில் இருக்கும் சில பலவீனங்கள் தொய்வுகளைத் தாண்டி நல்ல விசயத்தை மக்களுக்குச் சொல்ல நினைத்த இயக்குநரைப் பாராட்டலாம்.











