September 7, 2024
சினிமா செய்திகள்

சுந்தர்.சி யின் கலகலப்பு 3 படத்தில் கவின்?

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 மே 11 ஆம் தேதி வெளியான படம் கலகலப்பு. முழுநீள நகைச்சுவைப் படமாக அமைந்திருந்த அந்தப்படம் வெற்றி பெற்றது.

அதனால், அப்படத்தின் இரண்டாம்பாகமான கலகலப்பு 2 உருவானது. 2018 பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான அந்தப்படத்தையும் சுந்தர்.சி யே இயக்கியிருந்தார். ஆனால் இரண்டாம்பாகத்தில் நாயகர்களாக ஜீவா, ஜெய், சிவா ஆகியோரும் நாயகிகளாக நிக்கிகல்ராணி,கேத்தரின் தெரசா ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

இதனால்,இவற்றின் தொடர்ச்சியாக கலகலப்பு 3 படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. இதற்காக வழக்கம் போல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து ஒரு திரைக்கதையை எழுதிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதன்பின், அப்படத்தில் முதன்மை நாயகனாக நடிகர் கவினை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார் சுந்தர்.சி.இப்போது வரிசையாகப் படங்கள் வைத்திருப்பதால் உடனடியாக ஒப்புக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறாராம் கவின்.

சுந்தர்.சி போன்ற மூத்த இயக்குநரிடம் ஒப்புதல் கொடுத்துவிட்டால் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பது கவினின் எண்ணம்.

கவின் கைவசம் இப்போது,இளன் இயக்கும் ஸ்டார், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம் அதற்கடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் என நான்கு படங்கள் இருக்கின்றன.

இவற்றில், ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. கிஸ் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. நெல்சன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த படம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி வரிசையாகப் படங்கள் வைத்திருப்பதால் சுந்தர்.சி யின் அழைப்பை உடனடியாக ஏற்க முடியாத நிலை என்று கவின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை அறிந்த சுந்தர்.சி, வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தின் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அல்லது அது நடக்கும்போதே அதற்கு இணையாக கலகலப்பு 3 படத்தின் படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லித் தேதிகள் கேட்கிறாராம்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதாம்.

எல்லாம் சுமுகமாக நடந்து முடிந்தால் கலகலப்பு 3 படம் குறித்தும் அதில் கவின் நாயகன் என்கிற அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts