செய்திக் குறிப்புகள்

தொலைக்காட்சித் தொடர் எடுப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லையா? – தயாரிப்பாளர் கண்டனம்

புகழ்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களுக்கு வைப்பதற்குத் திரைப்படத் தயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

தொலைக்காட்சித் தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துவதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது.

ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிக முக்கியமானது. பல நாட்கள் சிந்தனை செய்து, பல தலைப்புகள் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு புதிய தலைப்பை முடிவு செய்து, கடைசியில் அந்தந்த சங்கங்களில் பதிவு செய்வதென்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்.

ஒருவேளை, தெரிந்தெடுக்கும் தலைப்பு வேறொரு தயாரிப்பாளர் பதிவு செய்திருந்தாலும் அல்லது அந்தத் தலைப்பில் வேறொரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டிருந்தாலும், நமக்கு அந்தத் தலைப்பு வேண்டுமென்றாலும், முறையாக அந்தத் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றோ ஒரு தொகை கொடுத்து வாங்கியோ சங்கத்தில் பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது.

ஆக ஒரு படத்திற்கு முக்கியமாக தலைப்பு தான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குநர் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் தலைப்பு தான் அங்கீகாரம். சில தலைப்புகளாலேயே மக்கள் ஆர்வத்துடன் முதல் நாளே படம் பார்க்கக் கூடிய சூழ்நிலையும் உண்டு. சில நேரங்களில் தலைப்பு பிரச்சனை, பெரிய பஞ்சாயத்தாக விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றம் வரைக்கும் சென்று படத்தின் வெளியீட்டைக் கூட தடை செய்திருக்கிறது.

ஆனால்,தொலைக்காட்சித் தொடர்களில் சர்வ சாதாரணமாக திரைப்படத் தலைப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிக வேடிக்கையாக இருக்கிறது.

என்னுடைய முதல் படமான ஈரமான ரோஜாவே, புது முகங்கள் நடித்து நான் தயாரித்து இயக்கிய 1991 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்தப் படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படமும் மற்ற ஏழு படங்களும் வெளியானது. அந்தப் போட்டியிலும், புதுமுகங்கள் நடித்த ஈரமான ரோஜாவே வெற்றிகரமாக 125 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஒரு புது இயக்குநராக தமிழ்த் திரையுலகில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது முதல் வெற்றிப்படமான ஈரமான ரோஜாவே மூலமாகத்தான்.

தற்போது, என் படத்தின் தலைப்பை கூகுளில் தேடினால், ஈரமான ரோஜாவே என்ற தொலைக்காட்சித்தொடர் தான் முதலில் வருகிறது. இதுமட்டுமில்லாது என் மற்ற படங்களான இரட்டை ரோஜா, பூவே பூச்சூடவா போன்ற படங்களின் தலைப்புகளும் தொலைக்காட்சித் தொடர்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது நியாயமுமில்லை தர்மமும் இல்லை. என் படத்தின் தலைப்புகளைப் போலவே மற்ற பல தயாரிப்பாளர்களின், இயக்குநர்களின் தலைப்புகளையும் தொடர்களில் பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தலைப்புகள் சம்பந்தமாக இவர்கள் யாரிடமும் முறையாக அனுமதி வாங்குவதும் இல்லை. முறையில்லாமல் எங்கள் சினிமா தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை அணுகி, அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு நாகரிகம் கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.

ஒரு தலைப்பைக் கூட சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் எடுப்பது என்பது மிக வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கும் உரியது.

ஆகவே தொலைக்காட்சித் தொடர்களுக்கும்,திரைப்படங்களைப் போல் தணிக்கை என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன்.

இவ்வாறு தயாரிப்பாளர் கேயார் கூறியுள்ளார்.

Related Posts