ஃபேமிலி படம் – திரைப்பட விமர்சனம்
திரைப்பட உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வு குறித்தான படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ஃபேமிலி படம்.திரைத்துறை சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால் அந்தப் பெயர்.
நாயகனாக நடித்திருக்கும் உதய் கார்த்திக், நிஜ உதவி இயக்குநர் போல்வே இருக்கிறார்.அதற்கேற்ப நடித்துமிருக்கிறார்.வாய்ப்பு கிடைத்த போது மகிழ்வது,அது பறிபோகும்போது துடிப்பது உள்ளிட்ட இடங்களில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சுபிக்ஷாவுக்கு நாயகனின் காதலி வேடம்.இப்படி ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணும்படி இருக்கிறார்.அவர் வெளிப்படுத்தும் அன்பும் அனுசரணையும் நன்று.
விவேக் பிரசன்னா,பார்த்திபன் குமார் ஆகியோர் நாயகனின் அண்ணன்களாக நடித்திருக்கிறார்கள்.நடிப்பிலும் முந்தி நிற்கிறார்கள்.நாயகனின் நண்பர் மற்றும் நடிகர் அஜித் இரசிகராக வரும் சந்தோஷ் நல்வரவு.இவருக்கு முழுநீள நகைச்சுவை நடிகராக வலம்வர வாய்ப்பிருக்கிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
மெய்யேந்திரன் காட்சிகளுக்குத் தக்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனீவியின் இசையில் பாடல்கள் இதம்.அஜீஷின் பின்னணி இசை அளவு. சுதர்சனின் படத்தொகுப்பு தாழ்வில்லை.
இயக்குநர் செல்வ குமார் திருமாறன்,பழகிய கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும் திரைக்கதை, காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்களில் படத்தை இற்றைப்படுத்தியிருக்கிறார்.
விரும்பும் தொழில் அல்லது இலட்சியத்தோடு குடும்பமும் முக்கியம். அவர்கள் துணையிருந்தால் வெற்றி நிச்சயம் எனும் நற்கருத்தை பரப்புரை தொனியின்றியும் இயல்பான திரைமொழியிலும் சொல்லியிருக்கிறார்.
குடும்பத்தோடு பார்க்கக் கூடிய குடும்பப்படம்.
– இளையவன்