சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் – அழைப்புக்குப் பின் வந்த அதிர்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

ஐஸ்வர்யா மருத்துவராக இருக்கிறார். புதுச்சேரி மட்டைப்பந்து அணியின் தலைவரான ரோகித்தை மணக்க இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன்தான் இந்த ரோகித். 29 வயதான ரோகித், தமிழ்நாடு அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015 இல் இலங்கைக்குச் சென்று விளையாடியவர். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்குத் தலைவராகவும் ஆனார் ரோகித்.

ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27, 2021) அன்று சென்னையில் நடக்க இருக்கிறது.

கொரோனா காலம் என்பதால் மிகச் சொற்பமானோருக்கே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.இயக்குநர் ஷங்கர் மனைவியுடன் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்.

அழைப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு ஷங்கர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதில், உங்களுடைய ஆதார் அட்டையை அனுப்பிவையுங்கள் அதோடு தடுப்பூசி செலுத்திக் கொண்டவரா? செலுத்தியவர் என்றால் அதற்கான சான்றையும் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

எதற்கு? என்று அனைவரும் அதிர்ச்சியுடன் வினவ, கொரோனா ஊரடங்குக் காலம் என்பதால் திருமண நிகழ்வில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இதனால், திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருடைய ஆதாரையும் வாங்கி, இவ்வளவு பேர் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்கிற விவரத்தோடு அரசு அனுமதி பெறுவதற்காகவே அனைவருடைய ஆதார் மற்றும் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களா? என்கிற விவரத்தையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது.

ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள இவ்வளவு நடைமுறைகளா? என்று திரையுலகினர் சலிப்படைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts