செய் – திரைப்பட விமர்சனம்
ஊரை ஏமாற்றிக் கொண்டு சும்மா சுற்றித் திரியும் கதாநாயகன் நகுல். சும்மா சுற்றினாலும் திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்கிற ஆசை கொண்டவர்.
நாயகி ஆஞ்சல்முஞ்சல் திரைப்பட இயக்குநராக ஆசைப்படுபவர். அப்புறமென்ன இருவரையும் ஒரு சுபயோக சுபதினத்தில் காதலிக்க வைத்துவிடுகிறார்கள்.
இந்தக் காதல்கதை மட்டும் போதாது என்பதால், நாயகி சொற்படி நாயகன் வேலைக்குப் போகிறார்.
வேலைக்குப் போன இடத்தில் ஒரு அமைச்சரின் மர்ம மரணம் சம்பந்தப்பட்ட பெரிய சிக்கலுக்குள் நாயகனும் மாட்டிக்கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம்.
நகுல் தனக்கே உரிய துடிப்புடன் படத்தில் நடித்திருக்கிறார்.அவர் நன்றாக நடனம் ஆடுவார் என்பது தெரியும். இந்தப்படத்தில் நன்றாக சண்டையும் போடுகிறார்.இவர் வேகத்துக்குத் திரைக்கதை ஈடுகொடுக்கவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் ஆஞ்சல் முஞ்சல் தமிழுக்குப் புது வரவு.அழகு மட்டுமின்றி நடிப்பிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.
நாசர், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் கொடுத்த வேடத்துக்கு நியாயம் செய்கிறார்கள்.
விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் மற்றும் வனக்காட்சிகள் சிறப்பு.
நிக்ஸ் லோபஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.அங்கங்கே ரசிக்க வைக்கிறது பின்னணி இசை.
மலையாளத்தில் பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ் பாபுவுக்கு தமிழில் இது முதல்படம்.
உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை மையமாகக் கொண்ட கதை. நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்பதால் திரைக்கதை அமைப்பில் இருக்கும் குறைகளை மறந்து பார்க்கலாம்.











