நாடு – திரைப்பட விமர்சனம்
ஒரு மலைகிராமம், எளியமக்கள், அவர்களுடைய மிக அடிப்படைத் தேவையான மருத்துவ வசதி ஆகியன பொதுப்பார்வையில் மிகச் சின்ன விசயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வலி என்பதையும் இந்தச் சின்ன விசயத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய பெரிய அரசியலையும் அழகாக வெளிப்படுத்தும் படம் நாடு.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைகிராமம்தான் கதைக்களம்.
அங்கு இருக்கும் அரசுமருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள் முன்வருவதில்லை. கட்டாயப்படுத்தி நியமித்தாலும் சீக்கிரமே பணிமாறுதல் பெற்றுச் சென்றுவிடுகிறார்கள். இச்சூழலில் அங்கு பணி செய்ய வரும் புதிய மருத்துவரை அங்கேயே தக்கவைத்துக் கொள்ள அம்மலைகிராம மக்கள் படும்பாடே திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் தர்சன், மலை கிராம இளைஞர் வேடத்துக்கு மிகப் பொருத்தமாகத் தன்னை மாற்றிக்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவிடுகிறார்.அப்பாவித்தனம் கலந்த அவருடைய செயல்கள் கலகலப்பூட்டவும் செய்கின்றன.கலங்கவும் வைத்துவிடுகிறது.
மருத்துவராக நடித்திருக்கும் மகிமாநம்பியார் காக்கைக்கூட்டத்தின் நடுவே ஒரு வெண்புறா போலிருக்கிறார்.நடிப்பிலும் வெல்கிறார்.அவரைப் பற்றிய கிராமமக்களின் பார்வைக்கும் அவருடைய சொந்த வாழ்நிலைக்குமான முரண்களுக்கு நடுவே அவர் தவிக்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு.
கிராமத்தலைவராக் வரும் சிங்கம்புலி, கிராமத்துப் பெரியவராக வரும் ஆர்.எஸ்.சிவாஜி, மாவட்ட ஆட்சியர் அருள்தாஸ்,தர்சனின் நண்பராக வரும் இன்பாரவிக்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி படம் இலகுவாக நகர உதவியிருக்கிறார்கள்.
காட்சிக்கு அழகான கொல்லிமலைத் தொடர்தான் கதைக்களம் என்பதால் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலுக்குக் கொண்டாட்டம்.புற அழகும் அகவலியும் அவருடைய கருவியில் சிறைபட்டு நம் கண்களுக்கு விருந்தாகியிருக்கின்றன.
சி.சத்யாவின் இசையில் பாடல்கள் இதம்.கதையையும் கதை மாந்தர்களையும் முழுமையாக உணர்ந்து உள்வாங்கி பின்னணி இசையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.சிலைகளுக்குக் கண் திறப்பு உயிரூட்டுவதைப் போல் பல காட்சிகளுக்கு இவருடைய பின்னணி இசையே உயிர்.
படத்தொகுப்பாளர் பிகேவும் சலிப்பில்லாமல் பார்க்க வைத்துவிடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சரவணன்.எளிய மனிதர்களைப் பின்னணியாகக் கொண்டு வலிய அர்சியல்பேசியிருக்கிறார். மருத்துவப்படிப்புக்கான புதிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் விளைவுகளைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
நடிகர்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அவர் கலைஞன் என்பதையும் தேர்ந்தெடுத்த கதைக்களம் அவர் மனிதன் என்பதையும் பறைசாற்றுகின்றன.
– எழில்











