பட்டங்களைத் தவிர்த்த தமிழ் சினிமா நடிகர்கள் !
சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன்,அஜித்குமார். “ என்று கூறியுள்ளார்.
அஜித்துக்கு ‘தல’ பட்டம் தீனா படத்துக்குப் பிறகு தான் ரசிகர்கள் அழைக்கத் துவங்கினார்கள். தற்பொழுது அஜித் மறுத்திருக்கிறார். அஜித்தைப் போலவே, சமீப காலங்களில் வேறு சில நடிகர்களும் பட்டத்தை வேண்டாம் என கூறியிருக்கிறார்கள். அவர்கள் யாரென்பதையும் கொஞ்சம் ரிவைண்ட் செய்துப் பார்த்துவிடலாம்.
சூரரைப் போற்று, ஜெய்பீம் என கவனிக்கத்தக்க படங்களைக் கொடுத்து வரும் நடிகர் சூர்யா. இவருக்கு ‘நடிப்பின் நாயகன்’ எனும் பட்டம் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. ஆனால், பட்டங்கள் மீது நம்பிக்கையில்லாதவர் என்பதால், அந்தப் பட்டத்தை வேண்டாமென்று விலக்கிவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ். அதனால், ரசிகர்கள் இவரை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். இணையத்திலும் இந்தப் பட்டப்பெயர் டிரெண்ட் ஆனது நினைவிருக்கும். ஒரே சூரியன், ஒரே சந்திரன் அதுமாதிரி ஒரே சூப்பர் ஸ்டார் மட்டுமே என்பதே தனுஷின் கருத்து. அதனால், அந்தப் படத்தை அன்போடு நிராகரித்தார்.
பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்களை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயம்ரவி. வித்தியாசமான முயற்சி, புதுமையான கதைகளைத் தேடி நடிப்பவர். இவருக்கு, சினிமாவில் கொடுக்கப்பட்ட பட்டம் ‘இளம் புயல்’. ஆரம்பக்கட்டத்தில் இந்தப் பட்டமானது பட டைட்டில்களில் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், சமீப காலமாக இந்தப் படத்தை படத்தில் பயன்படுத்துவதில்லை.
ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மனதில் நின்றவர் நடிகர் விஷால். இவருக்கு ‘புரட்சித் தளபதி’ எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. விஜய்யின் ரசிகராக இருந்தாலும், பட்டத்தை வேண்டாமென்று முடிவெடுத்தார். சமீபத்தில் வெளியாகும் அவரின் படங்களில் விஷாலுக்கு முன்பும், பின்பும் எந்த பட்டங்களையும் பார்த்திருக்க முடியாது.











